சென்னை மெட்ரோ - பி.இ.எம்.எல்., ரூ.3,658 கோடிக்கு ஒப்பந்தம் ஒப்பந்தம் வரும் 2029க்குள் 210 பெட்டிகள் வினியோகிக்கப்படும்
பெங்களூரு, நவ. 29--'பி.இ.எம்.எல்.,' எனும் மத்திய பொதுத்துறை நிறுவனமான, 'பாரத் எர்த் மூவர்ஸ்' 210 மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரித்து வினியோகிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் இருந்து 3,658 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது. ஒப்பந்தத்தின்படி, ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, தயாரிப்பு, வினியோகம், சோதனை, ரயில் இயக்கம், ஊழியர் பயிற்சி, 15 ஆண்டு பராமரிப்பு சேவை ஆகிய அனைத்தையும், பெங்களூரைச் சேர்ந்த பி.இ.எம்.எல்., செய்து தரும். மூன்று பெட்டிகள் கொண்ட 70 தொகுப்புகளாக வினியோகம் செய்யப்படும். வரும் 2027 ஜனவரி முதல் துவங்க உள்ள ரயில் பெட்டிகள் வினியோகம், 2029 ஏப்ரலுக்குள் முடிவடையும்.இந்த பெட்டிகள், சென்னையில், ஓட்டுநர் இல்லாத மூன்று மெட்ரோ ரயில் தடங்களில் இயக்கப்பட உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு, முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகளை, பி.இ.எம்.எல்., நிறுவனம் கடந்த அக்டோபரில் வினியோகித்தது. இத்தகைய ரயில் பெட்டிகளை, மும்பை, டில்லி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் இந்நிறுவனம் வழங்கி உள்ளது.