- நமது சிறப்பு நிருபர் -உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முன்னேற்ற நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் 'இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட் மாநாடு 2026' டில்லியில் நேற்று துவங்கியுள்ளது.செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைப்பது மாநாட்டின் முக்கிய நோக்கம். டில்லி பாரத் மண்டபத்தில் துவங்கியுள்ள இந்த ஐந்து நாள் மாநாடு, இத்துறையில் புதிய வழிகளை திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.குவிந்த வி.ஐ.பி.,க்கள் கிட்டத்தட்ட 45 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பிரிட்டன் துணை பிரதமர் தலைமையிலான குழுவும் வந்திருக்கிறது.அமெரிக்காவிலிருந்து வலுவான பிரதிநிதிகள் குழு பங்கேற்பதுடன், மைக்ரோசாப்ட், ஐ.பி.எம்., ஜூம், கைன்ட்ரல், அடோப் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளனர்.கூகுள் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் ஓப்பன் ஏ.ஐ., நிறுவனத்தின் சாம் ஆல்ட்மன் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தால் 'என்விடா' நிறுவன தலைவர் ஜென்சன் பங்கேற்கவில்லை.மூன்று கருப்பொருள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். 300க்கும் மேற்பட்ட கண்காட்சி மண்டபங்கள் மற்றும் நேரடி விளக்கங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.மக்கள், பூமி, முன்னேற்றம் என்ற மூன்று கருப்பொருள்களில் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, செர்பியா, எஸ்டோனியா, தஜிகிஸ்தான் மற்றும் ஆப்ரிக்க நாடுகள், கண்காட்சியில் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் கிருஷ்ணன் கூறுகையில், “இந்த நிகழ்வில் பங்கேற்கும் ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்தும்; உலகம் முழுதும் இருந்தும் மாநாட்டில் பங் கேற்க 2.50 லட்சத்துக்கு மேற்பட்ட பதிவுகள் வந்துள்ளன,” என்றார். “அனைவருக்கும் நன்மை” 'சர்வஜன ஹிதாய, சர்வஜன சுகாய', அதாவது, 'அனைவருக்கும் நன்மை, அனைவருக்கும் மகிழ்ச்சி' என்பதே மாநாட்டின் கருப்பொருள். மனித முன்னேற்றத்திற்காக மையப்பொருளாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவோம் என்ற உறுதியை மாநாடு பிரதிபலிக்கிறது. - பிரதமர் நரேந்திர மோடி “அணியாக அணுக வேண்டும்” இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, உடனடியாக ஏ.ஐ., பயன்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் துறை, கல்வி துறை மற்றும் கொள்கை வகுப்பவர்கள் இணைந்து, ஏ.ஐ., செயல்பாட்டில் 'டீம் இந்தியா' அணுகுமுறையுடன் செயல்பட வேண்டியது அவசியம். --- அனந்த நாகேஸ்வரன், தலைமை பொருளாதார ஆலோசகர். 'ஏ.ஐ.,க்கு மகாகும்பம்' வரலாற்று சிறப்பாக, உலகம் இந்த மாநாட்டில் குழுமி இருக்கிறது. இந்திய கிரீடத்தில் மற்றொரு இறகு இது. உண்மையான சர்வதேச ஏ.ஐ., தாக்கம் குறித்த மாநாட்டை நாம் நடத்துகிறோம். ஸ்டார்ட் அப், புதுமையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் குவிந்துள்ள இந்த மாநாட்டை 'செயற்கை நுண்ணறிவுக்கான மகாகும்பம்' எனலாம். -- ஜிதின் பிரசாதா, மத்திய இணை அமைச்சர். 'வேலை இழப்பு இல்லை' வங்கிகளில் கணினிகள் அறிமுகமானபோது வேலை இழப்பு ஏற்படவில்லை; மாறாக உற்பத்தி திறன் அதிகரித்தது. அதுபோல், ஏ.ஐ., வளர்ச்சியை கண்டு அச்சம் தேவையில்லை, பணிகளை அது பாதிக்காமல், மேம்படுத்த உதவும். -- -சஞ்சீவ் பிக்சந்தானி, இன்போ எட்ஜ் நிறுவனர். சாலை பாதுகாப்பில் ஏ.ஐ., கடந்த 2023ம் ஆண்டு நம் நாட்டில் 4.80 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்து, 1.72 லட்சம் பேர் உயிரிழந்தனர். உலகில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது. மாநாட்டில் நடந்த சாலை பாதுகாப்பில் ஏ.ஐ., என்ற அமர்வில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பங்கஜ் அகர்வால், வாகனம்- - டூ - வாகனம் (வி-டூ-வி) தகவல் தொடர்பு போன்ற ஏ.ஐ., தொழில்நுட்பங்கள் விபத்துகளை குறைக்க உதவும் என்றார். மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, வி - டூ - வி தகவல் தொடர்பை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக முன்பே தெரிவித்திருந்தார். 2030க்குள் சாலை விபத்துகளை பாதியாக குறைப்பதே இதன் இலக்காக உள்ளது. யு.பி.ஐ., ஒன் வேர்ல்டு ஏ.ஐ., மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கென 'யு.பி.ஐ., ஒன் வேர்ல்டு' என்ற சேவையை என்.பி.சி.ஐ., எனும் 'நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' அறிமுகம் செய்துள்ளது. உள்ளூரில் வங்கி கணக்கின் தேவையின்றி, அவரவர் நாட்டின் வங்கி கணக்கு வழியாகவே, இந்தியாவின் உடனடி கட்டண அமைப்பை பயன்படுத்தும் வசதியை இது வழங்குகிறது.