ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வங்கிகள் கடன் தருவதில்லை? பியுஷ் கோயலிடம் நிறுவனங்கள் முறையீடு
சிட்னி:“ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிகள் கடன் வழங்க முன்வருவதில்லை எனும் குறையை, ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்,” என, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துஉள்ளார்.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறும், இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பான 'கிரெடாய்' நடத்தும் மாநாட்டில் அவர் கூறியதாவது:நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், ரியல் எஸ்டேட் தொழில் மிகப்பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில், மற்ற தொழில் துறையினரை போன்று, ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வங்கிகள் கடன் வழங்க முன்வருவதில்லை என, நிறுவனங்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளன.ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் கவனத்துக்கு நிச்சயமாக இதை கொண்டு செல்கிறேன். வெளிப்படைத் தன்மையுடனும், ஊழல் இல்லாமலும் வணிகம் செய்ய நிறுவனங்கள் உறுதி அளிக்கும்பட்சத்தில், கட்டுமான திட்டங்கள் மற்றும் பணிகளுக்கு வழங்கப்படும் ஒப்புதல்களை மேலும் விரைவுபடுத்துவது குறித்து, முடிந்த உதவிகளை செய்யத் தயாராக உள்ளேன். இதுதொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன். கட்டடப் பணிகளில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கானோருக்கு எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., வசதிகளை நிறுவனங்கள் கட்டாயம் அளிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.