உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ரூ.85,460 கோடி மென்பொருள் ஏற்றுமதி சென்னை தொழில்நுட்ப பூங்கா அபாரம்

ரூ.85,460 கோடி மென்பொருள் ஏற்றுமதி சென்னை தொழில்நுட்ப பூங்கா அபாரம்

சென்னை:இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவின் சென்னை பிரிவு, கடந்த நிதியாண்டில் 85,460 கோடி ரூபாய் மதிப்பிலான மென்பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக, தரவுகள் தெரிவிக்கின்றன.எஸ்.டி.பி.ஐ., எனப்படும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா நிறுவனம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தன்னாட்சி நிறுவனம்.

6 சதவீதம்

இதன் சென்னை பிரிவு அலுவலகம், கடந்த 2025ம் நிதியாண்டில் 85,460 கோடி ரூபாய் மதிப்பிலான மென்பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டான 2024ல் ஏற்றுமதி செய்யப்பட்ட 80,979 கோடி ரூபாயைவிட 6 சதவீதம் அதிகம். இதுகுறித்து இதன் இயக்குநர் ஜெனரல் அரவிந்த்குமார் தெரிவித்திருப்பதாவது:சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ., மண்டல நிறுவனம் கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி என, ஐந்து துணை மையங்களைக் கொண்டு உள்ளது. சென்னை மண்டல நிறுவனம், தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியை பரவலாக்குவதுடன், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்தும் மென்பொருள் ஏற்றுமதி திறனை ஊக்குவித்து வருகிறது.எஸ்.டி.பி.ஐ., கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், தேசிய அளவில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. நாடு முழுதும் 67 மையங்களை இது கொண்டுள்ளது.

நிதி திரட்டல்

அத்துடன், 24 தொழில்முனைவோர் மையங்களுடன், 1,400 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் ஆதரவளித்து வருகிறது. ஸ்டார்அப் நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து, 574 கோடி ரூபாயை இதுவரை திரட்டியுள்ளன.இவ்வாறு தெரிவித்தார்.மென்பொருள் தொழில் நுட்ப பூங்கா மற்றும் மின்னணு வன்பொருள் தொழில்நுட்ப பூங்கா திட்டங்களை எஸ்.டி.பி.ஐ., செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை