சென்னை:வெளிநாடுகளுக்கு கயிறு பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்வதற்காக, தமிழக அரசு, தொழில்முனைவோருக்கு மாவட்ட வாரியாக பயிற்சி அளிக்க உள்ளது.தேங்காய் மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தென்னை நாரைப் பயன்படுத்தி, பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுதவிர, தென்னை நார் துகள் கட்டியை பயன்படுத்தி, கட்டடங்களில் மாடி தோட்டங்கள் அமைக்கப்படுகின்றன.நெதர்லாந்து, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தென்னை நார் துகளில் காய்கறி, பழங்கள் பயிரிடப்படுகின்றன.இதனால், வெளிநாடுகளில் தென்னை நார் துகளுக்கு அதிக தேவை உள்ளது.தமிழகத்தில் தென்னை விளைச்சல் அதிகம் உள்ளது. அதேசமயம், தென்னை நாரை பயன்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் குறைவாகவே உள்ளது.அந்த தொழிலை ஊக்கு விக்க, கோவையில், தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை அரசு துவக்கியுள்ளது. இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படுகிறது.இந்நிறுவனம், தென்னை நார் தொழிலை மேம்படுத்தவும், தென்னை நார், தென்னை நார் துகள் கட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க உதவுகிறது.தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கயிறு பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்வதற்காக தற்போது, மாவட்ட வாரியாக, தொழில்முனைவோருக்கு, கயிறு நிறுவனம் பயிற்சி அளிக்க உள்ளது. இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், தமிழகத்தில் இருந்து கயிறு பொருட்களை ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதற்கு மத்திய அரசு முகமைகளிடம் பதிவு செய்வது, வெளிநாடுகளில் உள்ள வாங்கக்கூடிய நிறுவனங்களை கண்டறிவது தொடர்பான விபரம் பலருக்கு தெரிவதில்லை.எனவே, மாவட்ட வாரியாக, கயிறு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரை அழைத்து, ஏற்றுமதி வழிமுறைகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நாமக்கல், கோவையில் சமீபத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.அதை தொடர்ந்து, சேலம், மதுரை, தஞ்சையில் பேராவூரணி, தென்காசி என, தொடர்ந்து பயிற்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டங்களில், டிஜிட்டல் முறையில் இணையதள வணிகத்தில் விற்பது, ஜி.எஸ்.டி., தாக்கல் செய்வது தொடர்பாகவும் பயிற்சிகள் அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.