ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும் இறக்குமதி வரியில் சலுகை தேவை
திருப்பூர், ஜன. 29-புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை இறக்குமதி செய்ய ஏதுவாக, 'ஏ - டப்' திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. புதிய தொழில்நுட்பத்தில் தயாராகும் இயந்திரங்களை இறக்குமதி செய்ய ஏதுவாக, 'ஏ - டப்' என்ற திருத்தியமைக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது.இயந்திரங்களை இறக்குமதி செய்தால், இத்திட்டத்தில், 15 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது. இதனால், திருப்பூர் பின்னலாடை தொழில்சார்ந்த அனைத்து நிறுவனங்களும் பயனடைந்து வந்தன. இத்திட்டம், 2022 மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. வரும் பட்ஜெட்டில், மீண்டும் 'ஏ - டப்' திட்டத்தை, முன்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மட்டும், அனைத்துவகை இறக்குமதிக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஏற்றுமதியாளருக்காக இயங்கும், பின்னலாடை, 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள், இயந்திரம், உதிரி பாகம், ஆர்கானிக் 'இங்க்' உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய, 27 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டும்.முதலீடு செய்யும் தொழில்முனைவோர், பெரும் தொகையை, இறக்குமதி வரியாக செலுத்த வேண்டியுள்ளதால், நவீன இயந்திர இறக்குமதி முடங்கிவிட்டதாக, தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து திருப்பூர் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''ஏ - டப்' திட்டத்தில், 15 சதவீத மானியம் கிடைப்பதில்லை. இயந்திர இறக்குமதிக்கு, 27 சதவீதம் வரி விதிக்கின்றனர். கடும் வரிச்சுமை ஏற்படுவதால், புதிய தொழில்நுட்பம் கொண்ட நவீன இயந்திரங்களை, 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இறக்குமதி செய்ய முடிவதில்லை. ஏற்றுமதியாளருக்கு இறக்குமதி வரிவிலக்கு அளிப்பது போல், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கும், இறக்குமதி வரியில் சலுகை வழங்கும் அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும்,'' என்றார்.