தொழில் வரிக்கு விலக்கு கோரி முதல்வரிடம் பேட்டியா கடிதம்
ஈரோடு:'சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வரி, தொழில் உரிம கட்டண விலக்கு அளிக்க வேண்டும்' என்று முதல்வர் ஸ்டாலினிடம், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பான 'பேட்டியா'வின் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் பொதுச்செயலர் ரவிசந்திரன் கடிதம் வழங்கினர்.கடிதத்தில் தெரிவித்துஇருப்பதாவது:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் என வகை பிரித்து, 2,500 முதல், 5,000 ரூபாய் வரையும், 5,000 முதல் 7,500 ரூபாய் வரையும், 8,000 முதல் 12,000 ரூபாய் வரையும், இதர பெரிய நிறுவனங்களுக்கு, 12,500 முதல் 40,000 ரூபாய் வரையும் தொழில் உரிம கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி சொத்து வரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி என பல பிரிவுகளில், 2023 முதல் அதிகரிக்கப்பட்டு, ஏற்கனவே வசூலிக்கப்படுகிறது. மேலும், 6 சதவீதம் உயர்வுடன் சொத்து வரி, 2024 முதல் வசூலிக்கப்படுகிறது.ஜி.எஸ்.டி., வரியுடன் தொழில் வரி சேர்க்கப்பட்டதாக கருதிய நிலையில், கடந்தாண்டுக்கு முந்தைய ஆண்டுகளுக்கும் சேர்த்து தொழில் வரி தொடர்கிறது.இது, பழைய வரியை விட பல மடங்கு அதிகம். தவிர, கூட்டு நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் ஆண்டுதோறும் மாநில அரசுக்கு பதிவுத்தொகை செலுத்தி, பதிவு புதுப்பிக்கப்படுகிறது. இதனால், தொழில் வரி செலுத்துவோர், வணிக நிறுவனத்தார் பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் உட்பட பல நிறுவனங்கள் வருகையால் தொழில், வணிக நிறுவனங்களின் விற்பனை கடும் போட்டியை சந்தித்து வருகிறது. ஆன்லைன் வணிக நிறுவனங்கள் எவ்வித வரிகளையும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு செலுத்துவதில்லை. அவர்களுடன் சிறு நிறுவனங்கள் போட்டி போட இயலாததால், பல தொழில்கள் அழிகின்றன. இவற்றை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.'சிறு, குறு நிறுவனங்கள் தொழில் வரி, தொழில் உரிம கட்டணம், சொத்து வரி, குப்பை வரி, சாக்கடை வரி என பல வரிகள் செலுத்தும் நிலையில், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் நகராட்சி, மாநகராட்சிகளுக்கு எவ்வித வரியும் செலுத்துவதில்லை!'