ஹரியானாவில் ரூ.3,000 கோடியில் லித்தியம் அயன் பேட்டரி ஆலை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் துவக்கினார்
குருகிராம்:ஹரியானாவின் சோஹ்னாவில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், ஜப்பானை சேர்ந்த டி.டி.கே., கார்ப்பரேஷனுக்கு சொந்தமான லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பு ஆலையை, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் துவங்கி வைத்தா ர். பின்னர் பேசிய அவர் தெரிவித்ததாவது: ஹரியானாவின் சோஹ்னா நகரம், அரசின் தீவிர முயற்சியால், நாட்டின் மின்னணு பொருட்கள் தயாரிப்பில் மதிப்புள்ள தொடராக மாறி வருகிறது. மொபைல் போன், கைக்கடிகாரம், இயர்பட்ஸ், ஏர்பாட்ஸ், லேப்டாப் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகள், தற்போது இந்தியாவில் டி.டி.கே., கார்ப்பரேஷனுக்கு சொந்தமான நவீன ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த ஆலையில், ஆண்டுக்கு 20 கோடி பேட்டரிகள் தயாரிக்கப்பட உள்ளன. தற்போது, இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்புக்கு மட்டும் ஆண்டுக்கு 50 கோடி பேட்டரி செல்கள் தேவைப்படுகின்றன. இதன்படி பார்த்தால், 40 சதவீதம் அளவுக்கு பேட்டரிகள் இந்த ஆலையில் தயாரிக்கப்பட உள்ளன. விரைவில் இந்த ஆலை, மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த ஆலை வாயிலாக 5,000 பேருக்கு வேலை கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நடப்பாண்டின் நான்காவது காலாண்டில் சிறிய அளவில் பேட்டரி தயாரிப்பை துவங்க உள்ளோம். படிப்படியாக தயாரிப்பை அதிகரித்து, நுகர்வோர் தேவை அடிப்படையில், முழு உற்பத்தி திறனுடன் 20 கோடி பேட்டரிகள் உற்பத்தி எட்டப்படும். லித்தியம் அயன் பேட்டரி வாங்க விரும்பும் அனைத்து நிறுவனங்களையும் எங்கள் ஆலை வரவேற்கிறது. - புமியோ சஷிதா, தலைமை செயல் அதிகாரி, டி.டி.கே., எனர்ஜி