| ADDED : டிச 03, 2025 03:21 AM
புதுடில்லி, டிச. 3- - ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், தனது நிறுவனத்துக்குள் மறு சீரமைப்பு பணிகளை நிறைவு செய்துள்ளது. நுகர்வோர் வணிகம் முழுதும் ஆர்.சி.பி.எல்., எனப்படும் நியூ ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் என்ற புதிய நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்.சி.பி.எல்., நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நேரடி துணை நிறுவனமாக இருக்கும். அதில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இதில் 83.56 சதவீத பங்குகள் இருக்கும். ரிலையன்ஸ் ரீடெய்ல் உட்பட அனைத்து எப்.எம்.சி.ஜி., பிராண்டுகளும் ஆர்.சி.பி.எல்., கைவசம் வருகின்றன. இதனையடுத்து, பழைய ஆர்.ஆர்.வி.எல்., நிறுவனம் கலைக்கப்படுகிறது. இம்மாதம் 1ம் தேதி முதல் இம்மாற்றம் நடைமுறைக்கு வந்ததாக பங்குச்சந்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு 10 ரூபாய் முக மதிப்புள்ள இரண்டு பங்குகளுக்கு அதே முகமதிப்பில் ஒரு பங்கு வீதம் புதிய ஆர்.சி.பி.எல்., தனது பங்குகளை ஒதுக்கும். பங்குதாரர்கள் வசம் 16.44 சதவீத பங்குகள் இருக்கும். ஜியோஸ்டார் இந்தியா தன் துணை நிறுவனமான ஸ்டார் டெலி விஷன் புரொடக் ஷனை ஜியோ ஸ்டாருடன் இணைக்கும் பணி நிறைவு பெற்றதாக ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த இந்நிறுவனம் ஜியோஸ்டார் இந்தியா என்ற பெயரில் செயல்படும் என பங்குச்சந்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.