புதிய கணக்கீட்டு முறையில் சில்லரை பணவீக்க தரவுகள்
புதுடில்லி: மாற்றியமைக்கப்பட்ட நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை விலை பணவீக்க தரவுகள் இன்று வெளியாகின்றன. இதுநாள் வரை 2012ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு சில்லரை விலை பணவீக்க தரவுகள் வெளியிடப்பட்டு வந்தன. இனி 2024ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு வெளியிடப்படும். புதிய குறியீட்டில் பல்வேறு பொருட்களுக்கான முக்கியத்துவம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உணவு பொருட்களுக்கான முக்கியத்துவம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. தரவுகளில் 46ல் இருந்து 37 சதவீதமாக அது குறைகிறது. எனினும், ஹோட்டல் உணவுகள், தின்பண்டங்கள் 3.30 சதவீத இடம் பிடிப்பதால், மொத்தம் 40 சதவீதமாக கருதலாம். அதேபோல், வரும் 27ம் தேதி வெளியாகவுள்ள கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான ஜி.டி.பி., தரவுகள், 2022 - 23ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட உள்ளன. தற்போது வரை கடந்த 2011 - 12ம் நிதியாண்டை அடிப்படையாக கொண்டே பொருளாதார வளர்ச்சி தரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. டிசம்பர் காலாண்டு தரவுகளோடு சேர்த்து, முந்தைய இரண்டு காலாண்டுகள் மற்றும் மூன்று நிதியாண்டுக்கான தரவுகளும் புதிய அடிப்படை ஆண்டுக்கு ஏற்றாற்போல திருத்தம் செய்து வெளியிடப்பட இருக்கின்றன. மேலும், வரும் மே மாதம் முதல், தொழில்துறை உற்பத்திக்கும் 2022 - 23ம் ஆண்டே அடிப்படை ஆண்டாக கணக்கிடப்படும். பணவீக்க விகித நிர்ணயத்துக்கு இதுவரை 299 ஆக இருந்த பொருள்கள், சேவைகள் எண்ணிக்கை 358 ஆக அதிகரிப்பு பொருள்கள் விலை, சேவைகளின் கட்டண தரவுகள் 1,395 நகர்ப்புற சந்தைகள், 1,465 கிராமப்புற சந்தைகளில் இருந்து பெறப்படும்.