இனி இரண்டு நாட்களில் எஸ்.ஐ.பி., முதலீடு ரத்து
மியூச்சுவல் பண்ட் திட்டங்களில், எஸ்.ஐ.பி., முறையில் செய்யப்படும் முதலீட்டை ரத்து செய்வது தொடர்பான கோரிக்கையை, இரண்டு வேலை நாட்களில் நிறைவேற்ற வேண்டும் என செபி உத்தரவிட்டுள்ளது.எஸ்.ஐ.பி., எனும் சீரான முதலீடு, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய ஏற்ற வழிகளில் ஒன்றாக அமைகிறது. தற்போது, எஸ்.ஐ.பி., முறையிலான முதலீட்டை ரத்து செய்வதற்கான செயல்முறையை, பங்கு சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி எளிதாக்கியுள்ளது.எஸ்.ஐ.பி., முதலீட்டை நிறுத்துவதற்கான கோரிக்கையை இரண்டு பணி நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு செபி கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த காலம் பொதுவானதாக இருக்கும். இந்த உத்தரவு, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் செய்யப்பட்ட முதலீடுகளுக்கு பொருந்தும். மியூச்சுவல் பண்ட் நிறுவன இணையதளம் அல்லது நிதி சேவை நிறுவனங் களின் தளங்கள் வாயிலாக ரத்து கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.ரத்து செய்யும் போது அதற்கான காரணத்தை முதலீட்டாளர்கள் தெரிவிக்க வேண்டும். இதற்கான வாய்ப்புகள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். ரத்து கோரிக்கை தொடர்பான நிலையை நிறுவனங்கள் பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.