ஸ்டார் ஹெல்த் தனித்தகவல் கசிவு கண்காணிப்பு ஆணையம் விசாரணை
புதுடில்லி,:ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்தின், கிட்டத்தட்ட 3.10 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்கள் கசிந்த விவகாரத்தில், காப்பீட்டு கண்காணிப்பு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தீவிர விசாரணையை துவங்கிஉள்ளது.காப்பீட்டுத் துறையில் சைபர் பாதுகாப்பில் நிலவும் குறைபாடுகள் குறித்து முழுமையான ஆய்வு செய்யப்படும் என ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தெரிவித்துஉள்ளது. மறு ஆய்வு
ஸ்டார் ஹெல்த் நிறுவன வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியானதை மிக தீவிர மான விஷயமாக கருதுவதாகவும் காப்பீடு நிறுவனங்கள் தங்கள் தகவல் பாதுகாப்பு கொள்கைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வலிமையான சைபர் பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்துவதுடன், தொடர்ச்சியான தணிக்கை மற்றும் பாதுகாப்பு அப்டேட்களை மேற்கொள்ள காப்பீடு நிறுவனங்களிடம் அறிவுறுத்திஉள்ளதாகவும் அவர் கூறினார். ஸ்டார் ெஹல்த் நிறுவன வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியானது தொடர்பாக, அந்நிறுவனத்திடம் தணிக்கை அறிக்கை கேட்கப்பட்டு உள்ளதாகவும், அது கிடைத்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன. அச்சம்
ஸ்டார் ஹெல்த் காப்பீடு நிறுவன தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி அமர்ஜீத் கனுஜா, தன்னிடம் 3.10 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்றதாகவும், பேசிய தொகைக்கு கூடுதலாக அவர் கேட்ட நிலையில், தகவல்களை கசிய விட்டுள்ளதாகவும் ஜென்சென் என்ற ஹேக்கர் கூறினார். இது காப்பீட்டு துறையில் வாடிக்கையாளரின் தனித்தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது.