டிரம்ப் விதித்த வரிக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
நியூயார்க்: உலக நாடுகள் மீது அவசர சட்டத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரிக்கு தடை விதித்து, அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஏப்., 2ம் தேதி இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரியை அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்க பொருளாதாரத்தை டிரம்ப் சீர்குலைத்ததாக குற்றஞ்சாட்டி, பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, 1977ம் ஆண்டு சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் அடிப்படையில் வரியை டிரம்ப் உயர்த்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்காக வரிவிதிப்பை பயன்படுத்த இச்சட்டம் அனுமதிக்கவில்லை என்றும்; அமெரிக்கா தொடர்ச்சியாக கடந்த 49 ஆண்டுகளாக வர்த்தகப் பற்றாக்குறையில் தான் இருந்து வருகிறது எனவும் மனுதாரர்கள் தரப்பின் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அதிபரின் அவசர தீர்மானம் சட்டரீதியாக செல்லுபடியாகுமா என்பதை பார்லிமென்ட் விவாதிக்க முடியும். நீதிமன்றம் விசாரிக்க முடியாது என அதிபர் தரப்பில் வாதிடப்பட்டது.இதை நிராகரித்த நீதிமன்றம், உலக நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கு தடை விதித்தது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.
இந்தியா சம்மதிக்க கூடாது'
அமெரிக்கா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களை, இந்தியா மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என, ஜி.டி.ஆர்.ஐ., அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் அஜய் ஸ்ரீவத்சவா கூறியதாவது: சட்டவிரோத அழுத்தம் வாயிலாக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை இந்தியா தவிர்க்க வேண்டும். டிரம்பின் வரி விதிப்பானது, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மட்டுமின்றி, அமெரிக்க உள்நாட்டு சட்டங்களை மீறியிருப்பது, நீதிமன்றத்தின் உத்தரவால் உறுதியாகி உள்ளது. இந்தியா உடனடியாக பேச்சை நிறுத்துவதுடன், அமெரிக்காவுக்கு நன்மையை அளிக்கும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், தன் பேரத்தின் அணுகுமுறையை மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோர்ட்டில் 'புதுக்கதை'
அதிபர் டிரம்ப் தலையிட்டு, அமெரிக்காவுடன் வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதாக கூறியதால் தான் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் போரை கைவிட்டதாக, நியூயார்க் நீதிமன்றத்தில் டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்டு லுட்னிக் இதை தெரிவித்தார். ஆனால், மூன்றாவது தரப்புக்கு இதில் தொடர்பில்லை என, இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது.