ஆயிரம் சந்தேகங்கள்: தொடர்ந்து நில் ரிட்டன் தாக்கல் செய்வது அவசியமா?
பங்குச் சந்தை பற்றி தெரியாது. குறைந்த அளவில் முதலீடு செய்து லாபம் ஈட்ட நினைக்கிறேன். ஆலோசனை தாருங்கள். எம்.தயாளன், எழும்பூர், சென்னை. பங்குச் சந்தைக்கு வருவதற்கு முன், மியூச்சுவல் பண்டுக்கு செல்லுங்கள். அங்கே, பங்கு சார்ந்த திட்டங்களில் எது நல்லது என்பதைக் கண்டுபிடித்து, முதலீடு செய்து வாருங்கள். ஒரு சில ஆண்டுகளில், அதன் நுட்பங்கள் பிடிபடும். எந்தெந்த பண்டு மேலாளர்கள் எந்தெந்த பங்குகளில் முதலீடு செய்கின்றனர், ஏன் செய்கின்றனர், அவை ஈட்டித்தரும் வருவாய் என்ன என்பதையெல்லாம் புரிந்துகொள்ளுங்கள். அதன் பின்னர், நேரடியாக பங்கு முதலீட்டுக்கு வாருங்கள். பங்குச் சந்தை முதலீடு என்பது ஒரு கலை பிளஸ் அறிவியல். எப்படி முதலீடு செய்வது என்பதை கற்பது கலைக்கு ஒப்பானது. எத்தகைய நிறுவனங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கண்டுபிடிப்பது அறிவியல் ஆய்வுக்கு நிகரானது. பங்குச் சந்தை வெற்றியாளர்கள் யாரை வேண்டுமானாலும் பாருங்கள், 24 மணி நேரமும் நிறுவனங்களை பற்றிய சிந்தனையிலேயே இருப்பர். எங்கோ ஓரிடத்தில் போட்டு வைத்தேன். அது கண்மறைவாக வளர்கிறது என்று இருக்க முடியாது. பங்குச் சந்தை முதலீடு கைக்குழந்தை மாதிரி. பார்த்துப் பார்த்து வளர்க்க வேண்டும். இதற்கெல்லாம் தயாராக இருந்தால் உள்ளே வாருங்கள். இல்லையெனில், மியூச்சுவல் பண்டோடு நின்று கொள்ளுங்கள். வங்கி கடன்களுக்கு வட்டி குறைப்பால் பணப்புழக்கம் அதிகரிக்கும் தான். ஆனால், வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதக் குறைப்பால் பணப்புழக்கம் குறையுமே! ஜி.ராஜேந்திரன், மின்னஞ்சல் எப்படி குறையும்? வங்கிச் சேமிப்புகளின் மீது நம்பிக்கை வைத்திருப்போருக்கு வேறு போக்கிடமே இல்லையே. அல்லது இதர சேமிப்பு அம்சங்களான மியூச்சுவல் பண்டு, பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவை பற்றி போதிய விபரமும் தெரியாது, ரிஸ்க் அதிகம் என்பதால் அச்சப்படவும் செய்வர். அதனால், அந்தப் பக்கம் போவதைத் தவிர்ப்பர். வேறு வழியில்லாமல் குறைந்த வட்டியாக இருந்தாலும் பரவாயில்லை என்று வங்கிகளிலேயே சேமிப்பர். எப்படி இருந்தாலும் அரசுக்கு வரும் பணம் வந்துகொண்டு தான் இருக்கும். பணப்புழக்கமும் தொடரும். என் மகன் சென்னையில் வேலை பா ர்த்தபோது, அவருக்குப் பி.எப்., பிடித்தம் செய்யப்பட்டது. பின்னர் அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். அவரது பி.எப்., பணத்தை எடுக்கப் போனபோது தான் தெரிந்தது, அவரது ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபை ல் எண் தற்போது அவரிடம் இல்லை என்பது. இதற்கு மாற்று வழியைத் தெரிவியுங்கள். எஸ். சுந்தர்ராஜ், ஒட்டன்சத்திரம் அவர் சென்னையில் பணியாற்றிய நிறுவனம் யு.ஏ.என்., எண்ணைக் கொடுத்திருக்குமே? அதை வைத்துக்கொண்டு, பி.எப்., வலைதளத்தில் லாகின் செய்யலாமே? அதன் பின்னர் உள்ளே 'மொபைல் எண் மாற்றும்' வசதியைப் பயன்படுத்தி, எண்ணை மாற்றிக்கொள்ளலாம். நான் கடந்த 8 ஆண்டுகளாக 'நில்' ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்து வருகிறேன். தற்பொழுது வருமான வரம்பு உயர்த்தப்பட்டு விட்டதால், தொடர்ந்து ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா? இரா.ரவீந்திரன், குரோம்பேட்டை. 'நில்' ரிட்டர்ன் என்றால், உங்களுடைய ஆண்டு வருவாய், வருமான வரி விலக்கு வரம்புக்குள் இருக்கிறது என்று எடுத்துக் கொள்கிறேன். அப்படியென்றால், தாக்கல் செய்ய வேண்டாம். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கடந்த நிதியாண்டில், உங்களுடைய சேமிப்புக் கணக்குகளில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் போட்டிருந்தாலோ, நடப்புக் கணக்கில் ஒரு கோடி ரூபாய் மேல் பணம் போட்டிருந்தாலோ, நீங்கள் நடத்தும் நிறுவனத்தின் மொத்த விற்பனை டர்ன் ஓவர் 60 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தாலோ, புரொபஷ்னல் வருவாய் 10 லட்சத்துக்கு மேல் இருந்தாலோ, மின்சார கட்டணம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தியிருந்தாலோ, டி.டி.எஸ்., / டி.சி.எஸ்., 25,000க்கு மேல் பிடித்திருந்தாலோ, வெளிநாட்டு சொத்துகளில் இருந்து வருவாய் வந்தாலோ, வெளிநாட்டுப் பயணத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்டிருந்தாலோ, நீங்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்து ஆக வேண்டும். நீங்கள் ஏற்கெனவே நில் ரிட்டர்ன் தான் தாக்கல் செய்கிறீர்கள். இம்முறையும் அதையே செய்துவிடுங்களேன். நல்ல மியூச்சுவல் பண்டு திட்டங்களைத் தேடி முதலீடு செய்யுங்கள் என்று சொல்கிறீர்கள். எப்படி தேடுவது? இ. சுரேஷ்குமார், மதுரை எப்படி பங்குகளில் பல்வேறு அளவுகோல்களை கொண்டு வடிகட்டுவதற்கு 'ஸ்கிரீனர்' என்ற வலைத்தளம் உள்ளதோ அதேபோல், மியூச்சுவல் பண்டுகளுக்கும் பல்வேறு வணிக நாளிதழ்களும் வலைத்தளங்களும் ஸ்கிரீனர்களை வைத்துள்ளன. இதில் போய் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கு ஏற்ப, பல்வேறு வடிகட்டிகளை பயன்படுத்தி, தரமான, உங்களுடைய முதலீட்டுத் தேவைக்கு ஏற்ற பண்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். வாங்க முடியாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துவிட்டது. வெள்ளியில் முதலீடு செய்யலாமா? உங்கள் கருத்து என்ன? கோதண்டராமன், உத்தண்டி ஒரு காலத்தில் வெள்ளியை விட தங்கத்திலேயே முதலீடு செய்யலாம் என்று சொல்லப்பட்டது. இப்போது வெள்ளியையும் அதேபோல் சொல்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக, வெள்ளியின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லை. தொடர்ந்து பற்றாக்குறை இருந்து வருகிறது. அதோடு வெள்ளியைப் பயன்படுத்தும் சூரிய மின்கலன், மின் வாகனங்கள், மின்னணுப் பொருட்களின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனாலும் தேவை அதிகமாகி வருகிறது. தேவைக்கும் இருப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வால், வெள்ளியின் விலை அதிகரிக்கும் என்று கணிக்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது, மிகப் பெரிய வளர்ச்சி இல்லையென்றாலும், ஓரளவுக்கு வளர்ச்சி தரக்கூடிய உலோகமாக, வெள்ளி இருக்கும். வெள்ளி இ.டி.எப்.,களில் முதலீடு செய்வது அதன் விலை உயர்வின் பலனை அனுபவிக்க ஏதுவாகும். வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.com ph: 98410 53881