உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / ஆயிரம் சந்தேகங்கள் / ஆயிரம் சந்தேகங்கள்: மியூச்சுவல் பண்டை விட சிறந்ததா எஸ்.ஐ.எப்.,?

ஆயிரம் சந்தேகங்கள்: மியூச்சுவல் பண்டை விட சிறந்ததா எஸ்.ஐ.எப்.,?

என் வயது 61. தேசிய பென்ஷன் திட்டத்தில் அஞ்சலகம் வாயிலாக, டைர் 1 மற்றும் டைர் 2ல், ஏறக்குறைய 10 லட்சம், ரொக்கமாக கட்டினேன். என்.பி.எஸ். 60:40 விதிகளின் படி, கட்டிய பணத்தில் 60 சதவீதம் கேட்கும் போது, சரியான பதில் இல்லை. ஏதோ இல்லாத கதையெல்லாம் பேசி, வேறு எங்கோ திருப்பி விடுகிறார்கள். கடந்த ஆறு மாதங்களாக சென்னை முழுதும் நடையாய் நடக்கிறேன். - ஆனந்தராஜ், சென்னை உங்கள் சிரமம் புரிகிறது. ஓய்வு காலத்தில் நிம்மதிக்காக சேமித்த பணத்தைப் பெற இப்படி அலைவது வேதனைக்குரியது தான். அஞ்சலகங்களில் சில நேரங்களில் நடைமுறை சிக்கல்கள் அல்லது சர்வர் குறைபாடுகளால் தாமதம் ஏற்படலாம். இதற்குத் தீர்வு காண நீங்கள் அஞ்சலகத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை. உங்களிடம் 'பிரான்' எண் மற்றும் பாஸ்வேர்டு இருந்தால், என்.பி.எஸ்., வலைதளத்தில், சி.ஆர்.ஏ.- என்.எஸ்.டி.எல்., அல்லது புரோடீன் தேர்வு செய்து, நீங்களே லாகின் செய்து விலகல் கோரிக்கை கொடுக்கலாம். அஞ்சலகம் அதை ஆன்லைனில் ஒப்புதல் அளித்தாலே போதுமானது. நேரில் அலையத் தேவையில்லை. டைர் 2 கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதை எப்போது வேண்டுமானாலும் முழுமையாக எடுத்து கொள்ளலாம். டைர் 1 கணக்கிற்குத்தான் 60:40 விதி பொருந்தும். அப்படியும் அஞ்சலகம் தொடர்ந்து இழுத்தடித்தால், என்.பி.எஸ் குறைதீர்வு உதவி எண்: 011-35655222; வாட்ஸாப்: 85888 52130; மின்னஞ்சல்: np s tru s t.org.inஆகியவற்றை தொடர்பு கொள்ளுங்கள். என் தந்தை ஒரு வங்கியின் 100 பங்குகளை வாங்கி வைத்துள்ளார். அது ஷேர் சர்டிபிகேட் ஆக உள்ளது. டீமேட் கணக்கு அவருக்கு எதுவும் இல்லை. அவர் காலமாகி ஓர் ஆண்டு ஆகிறது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? - அருண் கார்த்திக், திருப்பூர் உங்கள் தந்தையின் பங்குகளை நீங்கள் பெறுவதற்கு பெயர், 'உரிமை மாற்றம்' (Transmission) என்பதாகும். இப்போதுள்ள செபி விதிமுறைகளின்படி, காகித வடிவில் உள்ள பங்குகளை விற்பனை செய்ய முடியாது. எனவே, முதலில் உங்கள் பெயரில் ஒரு டீமேட் கணக்கை துவங்குங்கள். பின் சம்பந்தப்பட்ட வங்கியின் வலைதளத்திற்குச் சென்று, அவர்களின் ஆர்.டி.ஏ., எனும் பதிவாளர் மற்றும் பரிவர்த்தனை முகவர் யார் என்று பாருங்கள். அவர்களை தொடர்பு கொண்டு, பங்குகளின் உரிமை மாற்றம் பற்றி கேட்டால் உரிய விண்ணப்பங்களை தருவர். உங்கள் தந்தையின் இறப்பு சான்றிதழ், உங்கள் பான் கார்டு, ஆதார் மற்றும் வாரிசு சான்றிதழ் ஆகியவை தேவைப்படும். உங்கள் தந்தை உங்களை 'நாமினி'யாக பதிவு செய்திருந் தால் நடைமுறை கொஞ்சம் எளிது. இல்லையெனில், பங்குகளின் சந்தை மதிப்பை பொறுத்து, வாரிசு சான்றிதழ் அல்லது நீதிமன்ற சான்று தேவைப்படலாம். எல்லா ஆவணங்களையும் ஆர்.டி.ஏ.,விடம் சமர்ப்பித்தால், சரிபார்ப்புக்கு பிறகு, அந்த பங்குகள் நேரடியாக உங்கள் புதிய டீமேட் கணக்குக்கு வந்துவிடும். டிவிடெண்டு தொகை ஏதேனும் நிலுவையில் இருந்தால் அதுவும் கிடைக்கும். எஸ்.ஐ.எப்., என்றால் என்ன? அது மியூச்சுவல் பண்டை விட சிறந்ததா? அதன் வருவாய் விகிதம் எவ்வளவு? அதை எஸ்.ஐ.பி., பிளான் மாதிரி பயன்படுத்த முடியுமா? -எஸ்.சிவகுமார், மின்னஞ்சல் நீங்கள் குறிப்பிடும் 'எஸ்.ஐ.எப்.,' (ஸ்பெஷலைஸ்டு இன்வெஸ்ட்மென்ட் பண்டு) என்பது செபி அறிமுகம் செய்துள்ள 'புதிய சொத்துப் பிரிவு'. இது மியூச்சுவல் பண்டுக்கும், பி.எம்.எஸ்., எனப்படும் பெரும் பணக்காரர்களுக்கான முதலீட் டிற்கும் இடைப்பட்ட ஒரு பாலம். மியூச்சுவல் பண்டை விட சிறந்ததா என்று பார்ப்பதை விட, இது 'மாறுபட்டது' என்பதே சரி. சாதாரண மியூச்சுவல் பண்டில் பங்குகள் விலை ஏறினால் மட்டுமே லாபம் கிடைக்கும். ஆனால், இந்த எஸ்.ஐ.எப்.,ல் 'லாங்- ஷார்ட்' போன்ற உத்திகளை பயன்படுத்த அனுமதி உண்டு. அதாவது, சந்தை இறங்கும்போது கூட 'டெரிவேடிவ்'வாயிலாக இவர்களால் லாபம் ஈட்ட முடியும். அதே நேரம், கணிப்பு தவறினால் நஷ்டமும் அதிகமாக இருக்கும். எனவே, வழக்கமான பண்டுகளை விட இதில் ரிஸ்க் மிக அதிகம். இது ஏப்ரல் 2025இல் தான் நடைமுறைக்கு வந்துள்ளதால், இதன் செயல்பாட்டை இப்போதே கணிப்பது கடினம். இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.10 லட்சம் அவசியம். நீங்கள் கேட்கும் 'சிஸ்டமேடிக் வித்டிராயல் பிளான்' முறையை இதில் பயன்படுத்தலாம். ஆனால், ஒரு நிபந்தனை: இதிலிருந்து பணத்தை எடுக்கும்போது, உங்கள் மூலதனம் 10 லட்சத்துக்கு கீழே குறையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இது அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே ஏற்றது; பாதுகாப்பை விரும்புவோருக்கு அல்ல. என் மகள் ஒரு சிறிய மளிகைக்கடை நடத்தி வருகிறார். ஆப் ஒன்றின் வாயிலாக ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். தினசரி வரவாகும் தொகையில் இருந்து ஒரு தொகையை 270 நாட்களுக்கு செலுத்த வேண்டும். ஒரு மாதம் ஆன நிலையில், இனி கடன் தொகை வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்யப்படும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் ஏதேனும் பிரச்னை வருமா? - வி.சுந்தரராஜ், கோவை இதுபோன்ற பின்டெக் கடன்களுக்கான தவணை, உங்கள் மகளின் கடையில் உள்ள கியூ.ஆர்.கோடு வாயிலாக வரும் அன்றாட வசூலில் இருந்துதான் கழிக்கப்படும். ஒருவேளை, அன்றைய வசூல் குறைவாக இருந்தாலோ அல்லது ஒரு மாதத்திற்கு பிறகு விதிமுறைகள் மாறும்போதோ, தவணைத் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் இருந்து எடுக்கும் முறையை அவர்கள் செயல்படுத்தியிருக்கலாம். அதற்கான குறுஞ்செய்தியாகவே இது இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உண்டு. உங்கள் மகளின் வங்கி கணக்கில் தினமும் காலையில் தவணைத்தொகை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை கணக்கில் பணம் இல்லாமல் போனால், அவர்கள் பணம் எடுக்க முயலும் போது, 'பேமென்ட் பெயிலியர்' ஆகும். வங்கியானது, ஒவ்வொரு முறைக்கும் 'பவுன்ஸ் சார்ஜ்' என்று அபராதம் விதிக்கும். இது தேவையற்ற இழப்பு. அதேபோல, உங்கள் மகள் வாங்கியுள்ள கடனையும், திருப்பிச் செலுத்தும் தொகையையும் கணக்கிட்ட போது, வட்டி ஏறக்குறைய 21 சதவீதம் வருகிறது. இது தனிநபர் கடன்களை விட அதிகம். சிறு தொழிலுக்கு மிக குறைந்த வட்டியில் கிடைக்கும் 'முத்ரா' கடன் போன்ற அரசு திட்டங் களை வங்கிகளில் விசாரித்து மாறிக்கொள்வது புத்திசாலித்தனம். வீடு விற்ற பத்திரத்தில் குறிப்பிட்ட பணத்தை, பேங்கில் செலுத்தி வரியும் கட்டினேன். மேற்கொண்டு தந்த பணம் நோட்டாக என் கைவசம் இருக்கிறது. அதை பேங்கில் போடமுடியுமா? வரி கட்டவும் உடன்படுகிறேன் அல்லது வேறு வழி உள்ளதா? -சிவ.ஆனந்தா, மின்னஞ்சல் கையில் அதிக பணத்தை வைத்திருப்பது பாதுகாப்பற்றதுதான்; வங்கியில் போடுவதே சிறந்தது. ஆனால், இதில் ஒரு சட்ட சிக்கல் இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வீட்டை விற்றதற்கான பத்திரத்தில் குறிப்பிட்ட தொகைக்கு ஏற்கனவே வரி கட்டிவிட்டீர்கள். இப்போது கையில் இருக்கும் பணம் பத்திரத்தில் வராத தொகை என்றால், வருமான வரித்துறையின் பார்வையில் இது 'ஆதாரம் விளக்கப்படாத வருமானம்' என்று கருதப்பட வாய்ப்புள்ளது. இதற்கு சாதாரண வரியை விட, மிக அதிக அளவிலான வரி மற்றும் அபராதம் (60 சதவீதம் வரை) விதிக்கப்படலாம். மேலும், பத்திரத்தில் ஒரு தொகையை காட்டிவிட்டு, வங்கியில் கூடுதல் தொகையை செலுத்துவது, முந்தைய பத்திரப் பதிவை கேள்விக்குறியாக்கும். எனவே, அவசரப்பட்டு பணத்தை வங்கியில் செலுத்திவிட வேண்டாம். உடனடியாக ஒரு தகுதியான ஆடிட்டரை அணுகுங்கள். இந்த பணத்தை நடப்பு நிதியாண்டின் 'இதர வருமானமாக' காட்ட முடியுமா அல்லது வேறு ஏதேனும் சட்டப்பூர்வ வழிகள் உள்ளனவா என்று அவர் ஆலோசனை வழங்குவார். பாண்டுகளில் முதலீடு செய்வதற்கும் சில நிபந்தனைகள் உள்ளன. ஆடிட்டரின் முறையான வழி காட்டுதலுக்கு பிறகு வங்கியில் செலுத்துவதே பாதுகாப்பானது. வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.comph: 98410 53881


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை