உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதிக்கு நகை காணிக்கை தருவதற்கு கட்டுப்பாடு வரும்

திருப்பதிக்கு நகை காணிக்கை தருவதற்கு கட்டுப்பாடு வரும்

நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, பக்தர்கள் ஆபரணங்களை காணிக்கையாக வழங்குவதை பெற்றுக்கொள்வதற்கு தடைவிதிக்க, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய, 30 கிலோ எடையுள்ள தங்க கிரீடத்தின் உண்மையான மதிப்பு குறித்து எந்தவித தகவலும் இல்லை.கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினாலும், தங்க ஆபரணங்களுக்கான பில்லை கொடுக்காத பக்தர்களிடமிருந்து, தேவஸ்தானம் ஆபரணங்களை பெற்றுக் கொள்வது எந்தவிதத்தில் நியாயம்? என, தேவஸ்தான போர்டின் அறங்காவலர் குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ., வுமான சூர்யபிரகாஷ் ராவ், கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, செப்., 12ம் தேதி (இன்று) நடக்க உள்ள தேவஸ்தான போர்டின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என, அவர் கூறினார்.

ஐதராபாத் சட்டசபை வளாகத்தில், நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல், ஆபரணங்களை தயார் செய்து கொடுப்பது, இதற்கு தேவஸ்தானத்தை சேர்ந்த சில அதிகாரிகள் இடைத்தரகர்களாக செயல்படுவது போன்ற காரணத்தால், ஆபரணங்களை பெற்றுக்கொள்ள தடை விதிக்க வேண்டுமென்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பக்தர்கள் யாரேனும் தங்களின் பிரார்த்தனையாக ஆபரணங்களை காணிக்கையாக வழங்க முன்வந்தால், அவற்றை திருமலை கோவில் உண்டியலில் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை அதிகாரப்பூர்வமாக செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்களில், தற்போது 36 ஆயிரம் பேருக்கு மட்டும் தங்கும் விடுதி வசதி உள்ளது. இதை 50 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமலையில் தங்கும் வசதி, சாமி தரிசனம், இலவச அன்னதானம் போன்ற வசதிகள் குறித்து பக்தர்களிடம் அதிருப்தி உள்ளது. இதுகுறித்தும் பரிசீலிக்கப்படும்.திருமலை புண்ணிய ÷க்ஷத்திரத்தை, ஆன்மிக நகரமாக மாற்றி அமைக்கவும், கோவிலில் சுவாமி சன்னிதியில் ஆன்மிக மணம் கமழும் சூழ்நிலை உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும். கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வழங்கிய தங்க கிரீடம், வருமான வரி சட்ட வரம்புக்குள் வராவிட்டால், கிரீட விஷயம் குறித்து, போர்டின் ஆலோசனை கூட்டத்தில் விவாதித்த பின், மாநில அரசிடம் ஒப்படைப்பது குறித்து முடிவு செய்யப்படும் .இவ்வாறு சூர்யபிரகாஷ் ராவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை