அடுத்த மிரட்டல் ஜெய்ப்பூருக்குநகர் முழுவதும் பாதுகாப்பு உஷார்
ஜெய்ப்பூர்:'ஜெய்ப்பூரில் குண்டு வெடிக்கும்' என, பாகிஸ்தானில் இருந்து, மர்ம நபர், மொபைல் போனில் மிரட்டல் விடுத்ததை அடுத்து, ஜெய்ப்பூர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தான் போலீசார் கூறியதாவது:ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் பரத் சர்மா. இவரது மொபைல் போனுக்கு, இன்று (நேற்று) காலை, பாகிஸ்தானில் இருந்து, ஒரு அழைப்பு வந்திருந்தது. சில வினாடிகளிலேயே அந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த எண்ணுக்கு, பரத் சர்மா, தன் மொபைல் போனில் தொடர்பு கொண்டார்.அப்போது, பாகிஸ்தானில் இருந்து பேசிய ஒரு மர்ம நபர், ஜெய்ப்பூரில் பல இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவை அடுத்தடுத்து, வெடிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து, பரத் சர்மா, போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், ஜெய்ப்பூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஏற்கனவே ஜெய்ப்பூரில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டலை தொடர்ந்து, பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு போலீசார் கூறினர்.
பரிசு அதிகரிப்பு: டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு சம்பவத்தை, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பற்றிய முக்கியமான தகவல்களை தருவோருக்கு, 10 லட்ச ரூபாய் பரிசு தரப்படும் என, தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று அறிவித்தது.டில்லி ஐகோர்ட்டில் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணையை துவக்கிய போது, தேசிய புலனாய்வு அமைப்பு, துப்பு தருவோருக்கு, 5 லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்படும் என அறிவித்தது. தற்போது இது, 10 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.