உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிற்சி டாக்டர் கொலையில் மே.வங்க அரசுக்கு. சரமாரி கேள்வி!. 10 பேர் பணிக்குழுவை அமைத்தது சுப்ரீம் கோர்ட்

பயிற்சி டாக்டர் கொலையில் மே.வங்க அரசுக்கு. சரமாரி கேள்வி!. 10 பேர் பணிக்குழுவை அமைத்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி, கோல்கட்டா மருத்துவக் கல்லுாரி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மேற்கு வங்க அரசின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், சரமாரி கேள்விகளை எழுப்பியது. டாக்டர்கள் பாதுகாப்புக்காக வழிமுறைகள் உருவாக்க, 10 பேர் அடங்கிய தேசிய பணிக் குழுவையும் அமைத்துள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது.தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லுாரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், கடந்த, 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே, அந்த மருத்துவமனையை, மர்ம நபர்கள் சூறையாடினர். இது மாநில அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. பயிற்சி டாக்டர் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஇருந்தது.சந்தேக மரணம்போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:கடந்த, 9ம் தேதி காலை அந்த டாக்டர் படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. முதலில் இதை தற்கொலை என்றும், பின்னர் சந்தேகத்துக்குரிய மரணம் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவியின் உடலை பார்ப்பதற்கு பல மணி நேரம் அவருடைய பெற்றோருக்கு அனுமதி வழங்கவில்லை.உடலை பெற்றோரிடம் ஒப்படைத்த பின், அன்று இரவு 11:30 மணிக்கு தான், போலீசில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முறையானதல்ல. ஏன், முதலிலேயே போலீசுக்கு தகவல் கொடுக்கவில்லை. எப்.ஐ.ஆர்., ஏன் உடனடியாக பதிவு செய்யவில்லை?இந்த விஷயத்தில் கல்லுாரி முதல்வர் மற்றும் நிர்வாகம் ஏன் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இதற்கிடையே, பதவியை ராஜினாமா செய்த கல்லுாரி முதல்வரை, வேறொரு கல்லுாரிக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன?இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. இந்த விஷயத்தில், கல்லுாரி நிர்வாகமும்,போலீசாரும் மிகவும் மெத்தனமாக நடந்துள்ளனர். மாநில அரசும் இந்த விஷயத்தில் தன் கடமையை செய்யத் தவறிவிட்டது.ஆயிரக்கணக்கானோர் கல்லுாரிக்குள் நுழைந்து சூறையாடியுள்ளனர். ஆனால், அங்கு பாதுகாப்புக்கு அதிகளவில் போலீசார் இல்லை. இருந்தவர்களும் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.டாக்டர் கொலை சம்பவம் நடந்தவுடன், அந்தக் கல்லுாரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு பலப்படுத்தியிருக்க வேண்டும். இதில் அரசு தவறிவிட்டது.அறிக்கைஉடனடியாக அந்தக் கல்லுாரி வளாகத்தில், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை, சி.பி.ஐ., தாக்கல் செய்ய வேண்டும். அதுபோல, மர்ம கும்பல் நடத்திய தாக்குதல் தொடர்பான வழக்கின் விசாரணை தொடர்பாக, மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இதற்கு மேல், இதுபோல் மற்றொரு சம்பவம் நடப்பதற்கு நாடு காத்திருக்கக் கூடாது. டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.இதற்காக நடைமுறைகளை உருவாக்க, தேசிய அளவிலான பணிக் குழு அமைக்கப்படுகிறது. வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரீன் தலைமையிலான குழு, மூன்று வாரத்துக்குள் தன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.சமத்துவம்கோல்கட்டாவில் நடந்துள்ள சம்பவம், டாக்டர்கள் பணி தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. முதலில் அவர்களுடைய பாதுகாப்பு தொடர்பானது. தற்போது பெண்கள் அதிகளவில் இந்தத் துறையில் ஈடுபடுவதால், அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இளம் டாக்டர்கள், வாரத்தில், 36 மணி நேரம் பணி செய்ய வேண்டியுள்ளது. அவர்களுக்கு ஓய்வு அறைகள் இல்லை. ஆண்கள், பெண்களுக்கு என, தனித்தனி கழிப்பறைகள் இல்லை. பெண்கள் தங்களுடைய பணியிடங்களில் பாதுகாப்பாக இல்லாத நிலையில், சமத்துவம் ஏற்படாது.இந்த விஷயங்களை இந்தக் குழு ஆராய்ந்து தகுந்த ஆலோசனைகள் வழங்கும்.இவ்வாறு அமர்வு கூறியது.உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாகவும், தேசிய அளவிலான பணிக்குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரத்தை காட்டாதீங்க!

விசாரணையின்போது நீதிபதிகள் மேலும் கூறியதாவது:இந்த விஷயத்தில், உயிரிழந்த டாக்டரின் பெயர், அவர் சடலமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பலர், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது மிகவும் கவலைக்குரியது. இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவரின் பெயர், அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் அதை மீறியுள்ளன.நடந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் மாணவர்கள் போராடி வருகின்றனர். தங்கள் மனக்குமுறலை அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றனர். இதுபோன்றவர்கள் மீது மாநில அரசு தன் அதிகாரத்தை காட்டக் கூடாது. அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.இந்த விஷயத்தை நாம் உணர்வுபூர்வமாகவும், மனிதாபிமானத்துடனும் பார்க்க வேண்டும். இது தேசிய அளவிலான உணர்வு. அதை மதிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

முன்னாள் முதல்வர் மீது வழக்கு

பயிற்சி டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக, கோல்கட்டா ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த சந்தீப் கோஷிடம் சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.இந்நிலையில், மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக, கடந்த ஜூன் மாதம் புகார்கள் வந்தன. இது தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழுவை கோல்கட்டா போலீசார் அமைத்தனர். தற்போது, கல்லுாரி முதல்வர் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், ஊழல் பிரிவுகளின் கீழ், அவர் மீது, கோல்கட்டா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Indian
ஆக 21, 2024 13:51

பெண்ணை மதிக்க கற்று கொடுக்க வேண்டும் . கடும் தண்டனை தேவை .


VENKATASUBRAMANIAN
ஆக 21, 2024 08:47

அவர் ராஜினாமா செய்ய மாட்டார். அவரே அரசுக்கு எதிராக ஊர்வலம் போகிறார். இதுமாதிரி கேலிக்கூத்து எங்கேயாவது உண்டா


Appan
ஆக 21, 2024 07:49

மேற்கு வாங்க சி.எம் மம்தா இதற்க்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும்..அது தான் தர்மம்..அதை விட்டு அவரே போராட்டம் நடத்துகிறார்..இப்படி உலகில் யாரவது நடப்பார்களா ..இப்படி ஒழுக்கம் இல்ல அரசியல் நாட்டை அளித்து விடும்..அது தான் இப்போ மேற்கு வங்கத்தில் நடக்கிறது


rama adhavan
ஆக 21, 2024 03:02

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி