ஒடிசாவில் வெள்ளப்பெருக்கு: 600 கிராமங்கள் மூழ்கின
புவனேஸ்வர்:ஒடிசா மாநிலத்தில் உள்ள, நான்கு முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 600 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.ஒடிசா மாநிலத்தில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள பிராமணி, பாய்டாராணி, புதாபாலாங், சுபர்ணரேகா உள்ளிட்ட ஆறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜாஜ்பூர், கியோன்ஜிகார், பாத்ராக், கேத்திரபாரா, பாலாசோர், மாயூர்பியாஜ் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பாய்டாராணி ஆற்றின் குறுக்கே, சாதிபூரில் கட்டப்பட்டள்ள, 120 ஆண்டுகள் பழமையான பாலம், வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதனால், ஜாஜ்பூர் மாவட்டம், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. பானிகோய்லி முதல் கியோன்ஜிகார், ஜாசிபூர், காமாக்சியா நகர் உள்ளிட்ட பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்துள்ளன. போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரங்களில் உள்ள, 600 க்கும் மேற்பட்ட கிராமங்களை, வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பான குடிநீர், நடமாடும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை, அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நக்சல் வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.