தசரா விழாவுக்காக 2ம் கட்ட கஜபடை வருகை
மைசூரு: மைசூரு தசரா விழாவில் பங்கேற்பதற்காக, காட்டில் இருந்து, இரண்டாம் கட்டமாக ஐந்து யானைகள் நேற்று அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டன.பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, இந்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. விழாவின் பிரதான அடையாளமான ஜம்பு சவாரி ஊர்வலத்தில், 14 யானைகள் பங்கேற்க உள்ளன.இதற்காக, ஹெச்.டி., கோட்டே வீரனஹொசஹள்ளியில் இருந்து, கடந்த மாதம் 21ம் தேதி, முதல் கட்டமாக தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு தலைமையில் ஒன்பது யானைகள் மைசூருக்கு வந்தன. இந்த யானைகள், 23ம் தேதி, அரண்மனை வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டன.இரண்டாம் கட்டமாக, ஐந்து யானைகள் நேற்று காட்டில் இருந்து, லாரிகளில் அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டன. இதில், துபாரே முகாமில் இருந்து, 51 வயது கொண்ட பிரசாந்த் என்ற ஆண் யானை; 42 வயது கொண்ட சுக்ரீவா ஆண் யானை; ராமாபுரா முகாமில் இருந்து, 47 வயது கொண்ட ஹிரண்யா பெண் யானை; தொட்டஹரவே முகாமில் இருந்து, 53 வயது கொண்ட லட்சுமி பெண் யானை; மத்திக்கோடு முகாமில் இருந்து,41 வயது கொண்ட மஹீந்திரா ஆண் யானைஅடங்கும்.மைசூரு மண்டல வனபாதுகாப்பு அதிகாரி மாலதிபிரியா உட்பட உயர் அதிகாரிகள், அரண்மனை வாரிய அதிகாரிகள், யானைகளுக்கு பூஜை செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கரும்பு, வெல்லம், வாழைப்பழங்கள் ஊட்டினர்.காட்டில் இருந்து வந்ததால், யானைகள் களைப்பாக இருந்தன. எனவே தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினர். அவையும் உற்சாகமாக குளியல் போட்டன. யானைகளின் பாகன்கள், வளர்ப்பாளர்களின் குடும்பத்தினருடன் உடன் வந்தனர்.அனைவருக்கும், அரண்மனை வளாகத்திலேயே தற்காலிக ஷெட்கள் அமைக்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டுள்ளனர்.