பாழடைந்த கட்டடம் இடிந்து 3 பேர் பலி
ஹாசன்: பாழடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், பெண் உட்பட மூன்று வியாபாரிகள் பலியாகினர். பலர் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.ஹாசன், பேலுாரின் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம் எதிரில் பாழடைந்த கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தை ஒட்டி, வியாபாரிகள், காய்கறிகள், பழங்கள், பூக்கள் என, பல்வேறு பொருட்களை விற்று வாழ்க்கை நடத்துகின்றனர். கட்டடம் மிகவும் சிதிலம் அடைந்திருந்தது.மழைக்காலத்தில் இடிந்து விழுமோ என்ற பயத்திலேயே, வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடுவர். நேற்றும் வழக்கம் போன்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.வார நாட்களில் வாடிக்கையாளர்கள், அதிக எண்ணிக்கையில் வருவர். ஆனால் ஞாயிறு என்பதால், வாடிக்கையாளர்கள் அவ்வளவாக வரவில்லை. மதியம் 1:30 மணியளவில் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. வியாபாரிகள் பலரும் இடிபாடுகளில் சிக்கினர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேலுார் போலீசார், கிரேன் மற்றும் ஜே.சி.பி., உதவியுடன் இடிபாடுகளை அகற்றினர். ஆனால் அதற்குள், காய்கறி வியாபாரிகள் அமர்நாத், 45, நாசிர், 38, உயிரிழந்தனர். ஜோதி, நீலம்மா, ஆஷா, தீபா, ஷில்பா காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஜோதி, 35, உயிரிழந்தார்.சம்பவ இடத்தை தாசில்தார் மமதா, உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இடிபாடுகளுக்கிடையே மேலும் பல வியாபாரிகள் சிக்கி இருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. மீட்பு படையினர் இடிபாடுகளை அகற்றுவதில் ஈடுபட்டுள்ளனர்.