| ADDED : மே 04, 2024 09:01 PM
சண்டிகர்:பஞ்சாப் மாநிலத்தில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3 கிலோ ஹெராயின் மற்றும் ஒரு கிலோ மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து, பஞ்சாப் மாநில டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:ஐஸ் மற்றும் கிரிஸ்டல் மெத் என்ற பெயர்களால் அழைக்கப்படும் மெத்தம்பேட்டமைன், மனிதனை மிக விரைவில் அடிமையாக்கும் போதைப் பொருள். இந்த ஐஸ் மற்றும் ஹெராயின் ஆகியவற்றை நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து சர்வதேச கடத்தல்காரர்கள் நம் நாட்டுக்குள் கடத்தி வருகின்றனர். எல்லைப் பகுதியில் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக போதைப் பொருட்களை நம் நாட்டுக்குள் அனுப்புகின்றனர். இங்குள்ள கடத்தல் கும்பலின் பிரதிநிதிகள் அவற்றை எடுத்து பல மாநிலங்களுக்கும் அனுப்புகின்றனர். போலீசாரும் தொடர்ச்சியாக தீவிர கண்காணிப்பில் ஈட்டுபட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்து வருகிறது.இந்நிலையில், அமிர்தசரஸ் ஊரக போலீசார், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரை நேற்று கைது செய்தது. அவர்களிடம் இருந்து 3 கிலோ ஹெராயின் மற்றும் 1 கிலோ மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்டு உள்ள இருவரும் பாகிஸ்தானின் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் டோகர் ராஜ்புத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரிடமும் கிடுக்கிப் பிடி விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
ஹெராயின்
பஞ்சாப் மாநிலத்தில் -பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே நேற்று முன் தினம், தரன் தரன் மாவட்டம் கலியா கிராம வயலில் உடைந்த நிலையில் கிடந்த ஆளில்லா குட்டி விமானம் ஒன்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். இந்த குட்டி விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது. அதேபோல், அமிர்தசரஸ் ஹர்தோ ரத்தன் கிராம வயலில் கிடந்த 460 கிராம் ஹெராயின் பாக்கெட் மற்றும் அதனுடன் கட்டப்பட்டிருந்த சிறிய டார்ச் லைட் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.மேலும், தரன் தரன் மாவட்டம் சங்கதாரா கிராம வயலில் 406 கிராம் ஹெராயின் பாக்கெட் கண்டெடுக்கப்பட்டது.