டாக்டரை ஏமாற்றி ரூ.45 லட்சம் பறிப்பு
மைசூரு, : மைசூரு ஜெ.பி., நகரை சேர்ந்த டாக்டர் ஒருவரை, செப்., 12ல் மொபைல் போனில் மர்ம நபர் தொடர்பு கொண்டார். 'டெலிகாம் துறையில் இருந்து பேசுகிறேன். உங்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி, யாரோ ஒருவர் கனரா வங்கியில் கணக்கு துவக்கி உள்ளார்.அதில், கோடிக்கணக்கான ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளனர். உங்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். உங்கள் சரியான ஆதார் நம்பரை தாருங்கள். அதன் பின், உங்களுக்கு வரும் ஓ.டி.பி., எண்ணை தாருங்கள்' என கூறியுள்ளார்.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர், மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபரிடம், தனது ஆதார் எண்ணையும், ஓ.டி.பி., எண்ணையும் கொடுத்துள்ளார்.சிறிது நேரத்தில், டாக்டரின் வங்கி கணக்கில் இருந்து 45 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், சி.இ.என்., எனும் சைபர் கிரைம் பொருளாதார குற்றம், போதைப்பொருள் தடுப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.