துப்புரவாளர் வேலைக்கு 46,000 பட்டதாரிகள் விண்ணப்பம்
சண்டிகர் ஹரியானாவில் துப்புரவு பணியாளர் பணியிடத்துக்கு, 46,000 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு அரசு துறைகள் உள்ளிட்டவற்றில் துப்புரவு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது. இதற்கு, 40,0000 பட்டதாரிகள், 6,000 முதுநிலை பட்டதாரிகள், பிளஸ் 2 படித்துள்ள, 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.அரசு துறைகள், வாரியங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் துாய்மை செய்வது, குப்பையை அள்ளுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் துாய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.இதற்கு, மாதம் 15,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும். ஹரியானா அரசின், பணியாளர் நியமனத்துக்கான அமைப்பின் வாயிலாக ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர் என, விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்ற தகவல் இடம்பெறவில்லை.இருப்பினும், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் உள்ளிட்டோர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். இது, அரசு வேலையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதே நேரத்தில், வேலைவாய்ப்பின்மை ஒரு தீவிர பிரச்னையாக இருப்பதை காட்டுவதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.பள்ளிகள், தனியார் நிறுவனங்களில் கூட, 10,000 ரூபாய் தான் மாத சம்பளம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணிக்கு, 15,000 ரூபாய் கிடைக்கும் என, இதற்கு விண்ணப்பித்துள்ள ஒருவர் கூறியுள்ளார்.