சைபர் கொத்தடிமைகளாக சிக்கிய 47 இந்தியர்கள் லாவோசில் மீட்பு
புதுடில்லி: வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு லாவோஸ் நாட்டுக்குச் சென்று, அங்கு, 'ஆன்லைன்' மோசடி பணியில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்களை துாதரக அதிகாரிகள் நேற்று பத்திரமாக மீட்டனர்.தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி மத்திய அரசு தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. லாவோஸ் நாட்டில் வேலை என ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் அங்கு 'சைபர்' அடிமைகளாக சிக்கித் தவிப்பது தெரியவந்துள்ளது. லாவோஸ் நாட்டுக்கு வேலைக்குச் செல்லும் இந்திய இளைஞர்களின் பாஸ்போர்ட்களை மோசடிப் பேர்வழிகள் முதலில் பறிமுதல் செய்து வைக்கின்றனர்.பின்னர், அவர்களுக்கு பெண்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களுடன் சமூக வலைதளங்கள் மற்றும், 'டேட்டிங்' செயலிகளில் போலியான கணக்குகளை உருவாக்குகின்றனர். இந்தியாவில் உள்ள ஆண்களுடன் நட்பாக பழகி அவர்களை, 'கிரிப்டோகரன்சி' உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ய வைத்து பெரும் பணத்தை ஏமாற்றுகின்றனர். இப்படி வேலைக்குச் சென்று ஏமாறும் இந்திய இளைஞர்களுக்கு தினமும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதை அடைய தவறினால் தண்டனை வழங்கப்படுகிறது. பல நாட்கள் உணவு வழங்காமல் கொடுமைப்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. இப்படி லாவோஸ் சென்று ஏமாந்த 635 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், அந்நாட்டின் போகியோ மாகாணத்தின், 'கோல்டன் ட்ரையாங்கிள்' என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கி வரும் அலுவலகத்தில் சிக்கிக்கொண்ட இந்தியர்கள் 47 பேர் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.அந்நாட்டில் உள்ள இந்திய துாதரக அதிகாரி கள் அவர்களை மீட்டு இந்தியா அனுப்பும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.