| ADDED : மே 03, 2024 02:52 AM
புதுச்சேரி:புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி மார்ச் 2ம் தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விவேகானந்தன் 59, கருணாஸ் 19, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.வழக்கில் தடயவியல் நிபுணர்கள் சேகரித்த தடயங்கள், ரத்த மாதிரிகள், டி.என்.ஏ., பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தொடர்ந்து 500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை டி.ஜி.பி., அலுவலத்தில் இருந்து போக்சோ நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிக்கை கணினி வாயிலாக நேற்று முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தாக்கல் செய்தனர்.வழக்கில் கடத்தல், அடைத்து வைத்தல், பலாத்காரம், கொலை சாட்சியங்கள் அழித்தல், வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 80 சாட்சிகள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கையில் ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ளது.