அங்கன்வாடி உணவு பொருள் பதுக்கிய மேலும் 6 பேர் கைது
தார்வாட்; ஹூப்பள்ளியில் அங்கன்வாடி மையத்தின் உணவுப்பொருட்களை, சட்ட விரோதமாக குடோனில் பதுக்கி வைத்திருந்த வழக்கில், மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில், குழந்தைகள், கர்ப்பிணியர், பிரசவித்த பெண்களுக்கு, அங்கன்வாடி மையம் மூலம் ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த பொருட்களை, காங்கிரஸ் பிரமுகர் பைதுல்லா கில்லேதர், அவரது கணவர் பரூக் ஆகியோர் சட்ட விரோதமாக வைத்திருப்பதாக, உணவு பொது வினியோக துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான அங்கன்வாடி மையத்தின் உணவுப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை குடோனில் ரெய்டு நடத்திய போலீசார், கண்டறிந்தனர். இது தொடர்பாக, 18 அங்கன்வாடி மையத்தின் ஊழியர்கள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.இச்சம்பவத்தில் தொடர்புடைய பைதுல்லா கில்லேதர், பரூக் உட்பட பலரை போலீசார் தேடி வந்தனர். இதில் தொடர்புடையவர்கள், மஹாராஷ்டிரா, ஆந்திராவுக்கு தப்பியோடியதாக சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கும், கசபா போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களை பிடிக்க அங்கு சென்றனர். குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வாட்ஸாப் காலில் பேசி வந்ததால், அவர்கள் இருக்கும் பகுதியை கண்டறிவது சிரமமாக உள்ளது.அதேவேளையில், முக்கிய குற்றவாளிகளான பைதுல்லா கில்லேதர், பரூக் தலைமறைவாக காரணமாக இருந்த 35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட சோனியா காந்தி நகரின் அல்தாப் கலடகி, கேஸ்வபூரின் சலிம் பேபரி, உதயநகரின் சலீம் செய்க், மெஹபூபா நகரின் சலீம் அட்டர், பங்காபூர் சவுக்கின் தாபிர் சவுத்ரி, பசவராஜ் வால்மீகி ஆகிய ஆறு பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.இதன் மூலம், கைதானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.