| ADDED : ஜூன் 16, 2024 10:57 PM
கதக்: காங்கிரஸ் ஆட்சியில் 70 சதவீத கமிஷன் வாங்கப்படுவதாக, பா.ஜ.,-- - எம்.எல்.ஏ., சி.சி.பாட்டீல் குற்றம் சாட்டி உள்ளார்.கதக் நரகுந்த் தொகுதி பா.ஜ.,- - எம்.எல்.ஏ., சி.சி.பாட்டீல் நேற்று அளித்த பேட்டி:கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை எந்த பகுதியிலும், வளர்ச்சிப் பணிகள் நடக்கவே இல்லை. எங்கள் ஆட்சியில் 40 சதவீத கமிஷன் வாங்கப்படுவதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இப்போது காங்கிரஸ் ஆட்சியில் 60 முதல் 70 சதவீத கமிஷன் வாங்குகின்றனர்.மற்ற மாநிலங்களை விட கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவு என, அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறுகிறார். இதைக் கூறுவதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்.லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த தொகுதிகளில் வெற்றி அடைய முடியாததால், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஏமாற்றத்தில் உள்ளனர். இதனால் எங்களுக்கு எதிராக, வெறுப்பு அரசியல் செய்ய துவங்கி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்பு, எடியூரப்பா மீது பதிவான பாலியல் வழக்கிற்கு, இப்போது பிடிவாரன்ட் கொண்டு வந்துள்ளனர்.அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களை பற்றி, எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் வாக்குறுதிகளை சரியாக செயல்படுத்த வேண்டும். வளர்ச்சி திட்டங்களுக்காக, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளேன் என்று சித்தராமையா கூறுகிறார். ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது. இந்த அரசின் அணுகுமுறை சந்தேகமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.