கதக் மாவட்டம், லட்சுமேஸ்வரை சேர்ந்தவர் நிசார் முகமது, 52. இளம் வயதில் இருந்தே பல்வேறு தோட்டங்களில், தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வெற்றிலை, கறிவேப்பிலை என விவசாயம் செய்ததில் அவருக்கு பல ஆண்டு அனுபவம் உள்ளது.தான் சம்பாதித்த பணத்தில், சிறுக சிறுக சேர்த்து, ஒரு ஏக்கர் நிலம் வாங்கினார். 2.50 லட்சம் ரூபாய் செலவில் 3,500 வெற்றிலைக் கொடி விதைகளை வாங்கி வந்து பயிரிட்டார்.தனது அனுபவம் அனைத்தையும் காண்பித்து, நல்ல விளைச்சலை அறுவடை செய்கிறார். இவரது தோட்டத்தில் உள்ள வெற்றிலைக் கொடிகள் ஆரோக்கியமாக இருப்பதால், இருபது நாட்களுக்கு ஒருமுறை, வெற்றிலைகளை அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறார்.கறிவேப்பிலை அனைத்து வகையான உணவிலும், பயன்படுத்தப்படுகிறது. இதன் தேவை, ஆண்டு முழுதும் தேவை உள்ளது.குறிப்பாக, வட மாவட்ட மக்கள் அதிகளவில், 'வெள்ளை வெற்றிலை' பயன்படுத்துகின்றனர். இந்த வெற்றிலையை, பாக்குடன் மடித்து சாப்பிட வசதியாக இருப்பதால், அதிகம் விரும்புகின்றனர்.இது தொடர்பாக நிசார் அகமது கூறியதாவது:பாக்கு மலை பிரதேசங்களிலும், வெற்றிலை நில பிரதேசங்களிலும் விளைந்தாலும், இரண்டு பிரிக்க முடியாத ஒன்று. தற்போது சந்தையில் 12,000 வெள்ளை வெற்றிலைகள், 6,000 முதல் 7,000 ரூபாய் வரை விற்பனையாகின்றன.ஆடி மாதத்தில் தினமும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடப்பதால், வெற்றிலை தேவை இருக்கும். அப்போது வெற்றிலை தேவை அதிகரிப்பதுடன், நல்ல விலையில் விற்பனையாகும். ஒருமுறை வெற்றிலை நடவு செய்தால், 15 முதல் 20 ஆண்டுகள் வரை நமக்கு நன்மை பயக்கும். அதேவேளையில், செடி, கொடிகளை பராமரிப்பது, நம் குழந்தைகளை வளர்ப்பது போன்ற பார்த்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.