முருகேஷ்பாளையா: விடுமுறைக்காக மாமா வீட்டுக்கு வந்த 18 வயது மாணவர் ஓட்டிய கார் மோதி, விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.பெங்களூரு, முருகேஷ்பாளையாவின் காலப்பா லே அவுட்டில், தாமரை கண்ணன் - ஜான்சி வசித்து வருகின்றனர். இத்தம்பதிக்கு, 10 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஆரவ் என்ற மகனும் இருந்தான். அப்பகுதியின் நஞ்சாரெட்டி காலனியில் உள்ள ஓம்சக்தி மாரியம்மா கோவிலில் நேற்று கூழ் வார்த்தல் திருவிழா நடந்தது.கோவிலுக்கு செல்வதற்காக, மகனை குளிக்க வைத்து தயார் செய்தனர். காலை 10:39 மணியளவில், பக்கத்து வீட்டில் உள்ள லோகேஷ் என்பவரின் 5 வயது மகன் தன்ராஜ் என்ற சிறுவனுடன் விளையாடுவதற்கு ஆரவ் வெளியே சென்றான்.இந்த வேளையில், செவ்ரோலெட் என்ஜாய் எல்.எஸ்., மாடல் கார், தெருவில்வேகமாக வந்து இரண்டு சிறுவர்கள் மீதும் மோதியது. காரின் சக்கரம் ஏறியதில் ஆரவ் படுகாயம் அடைந்தான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவனை, பழைய விமான நிலைய சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர்.முதலுதவி சிகிச்சைக்கு பின், மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை நடத்திய மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டான் என்று கூறினர். இதையடுத்து, சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு உடலை எடுத்து சென்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.இதற்கிடையில், தன்ராஜ் என்ற சிறுவனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவனுக்கு, சி.வி.ராமன்நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.கார் மோதியதில், அங்கு நின்றிருந்த ஆறு இரு சக்கர வாகனங்கள், ஒரு கார் சேதம் அடைந்தது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், 'விபத்து நடந்த போது, காரில் இருவர் இருந்தனர். விபத்துக்கு பின், அவர்கள் வீட்டில் பதுங்கி கொண்டனர். அவர்களது தந்தை வந்து, தான் தான் காரை ஓட்டியதாக மாற்றி விட்டார்' என்றனர். ஆரம்பத்தில் கார் ஓட்டியது, 15வது சிறுவன் என்று சொல்லப்பட்டது. பின்னர், அவரது ஆதார் அடையாள அட்டையை பரிசோதனை செய்தபோது, 18 வயது நிரம்பியது உறுதியானது. இதையடுத்து, இந்திராநகர் போக்குவரத்து போலீசார், காரை ஓட்டிய தேவராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை.கார் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, தேவராஜ் ஆக்சிலேட்டரை தவறுதலாக மிதித்ததால், விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது. கல்லுாரி மாணவரான அவர், விடுமுறைக்காக மாமா வீட்டுக்கு வந்த போது, கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று அப்பகுதியினர் கூறினர்.அவரது மாமா ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இதனால், காரின் முன் பகுதியில் போலீஸ் என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த ஜீவன்பீமா நகர், இந்திராநகர் போலீசார், உதவி கமிஷனர் ரமேஷ் உட்பட உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தினர்.மகனை இழந்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். கடந்த வாரம் தான், 5வது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடி உள்ளனர். அதற்குள் இத்தகைய சோக சம்பவம் நடந்து விட்டதே என்று அழுதது, கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.