தங்கம், வெள்ளி இழை பதித்த ஒரு கிலோ ஸ்வீட் ரூ.50,000
கோண்டா:உத்தர பிரதேசத்தில், ஹோலி பண்டிகையையொட்டி தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு ஸ்வீட் வகை ஒரு கிலோ, 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலி பண்டிகை நாடு முழுதும் இன்று கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் ஹோலி மிகவும் விமரிசையாக கொண்டாடும். வண்ண பொடிகளை துாவுவது மட்டுமின்றி ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். எனவே, ஹோலி பண்டிகையின் போது இனிப்புகள் விற்பனை பரபரக்கும். விலை உயர்வதோடு, பல புதிய வகை இனிப்புகளும் சந்தைக்கு வரும்.பொதுவாக ஹோலி பண்டிகையின் போது, 'குஜியா' என்ற வகை இனிப்பு அதிகம் விற்பனையாகிறது. பாலில் செய்யப்படும் பால்கோவாவுடன் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் பழங்களால் நிரப்பப்படுவதே குஜியா என அழைக்கப்படுகிறது.உத்தர பிரதேச மாநிலம் கோண்டா நகரில் உள்ள ஒரு கடையில் இந்த தயாரிக்கப்பட்டுள்ள குஜியா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த குஜியா, உண்பதற்கு ஏற்ற, 24 காரட் தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதனுள், சிறப்பு வகை உலர் பழங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த குஜியா ஒரு கிலோ, 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு இனிப்பின் விலை, 1,300 ரூபாய்.இதற்கிடையே, லக்னோவில் உள்ள ஒரு கடையில், 64 செ.மீ., விட்டம் மற்றும் 6 கிலோ எடையில் நாட்டிலேயே மிகப்பெரிய குஜியா தயாரிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
வெள்ளி பிச்காரி
ஹோலி பண்டிகையின் போது வண்ண பொடிகளை அடித்து விளையாட, 'வாட்டர் கன்' எனப்படும், வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழல்கள் பயன்படுத்தப்படும். இதை ஹிந்தியில், 'பிச்காரி' என்கின்றனர். பிச்காரி மற்றும் வண்ண நீர் வைத்துக் கொள்ளும் பக்கெட் அதிக அளவில் விற்பனையாகும்.உ.பி.,யின் லக்னோவில் உள்ள நகைக்கடை ஒன்றில், வெள்ளியில் செய்யப்பட்ட பிச்காரி மற்றும் பக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, 8,000 ரூபாயில் துவங்கி, 1 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.