சண்டிகர், ஹரியானாவில் ஜிம் பயிற்சியாளர் மீது ஏற்பட்ட கள்ளக் காதலால், கணவரை ஆள் வைத்து தீர்த்துக் கட்டிய மனைவியை, மூன்று ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர். ஹரியானாவின் பானிபட் பகுதியில், 'கம்ப்யூட்டர் சென்டர்' நடத்தி வந்த வினோத் பராரா என்பவர் மனைவி நிதி மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.கடந்த 2021ல் இவர் கார் மீது லாரி மோதியதில், இரண்டு கால்களும் உடைந்த நிலையில் படுகாயமடைந்தார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சில மாதங்களுக்குப் பின் வீட்டில் இருந்த அவரை, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தேவ் சுனார் சுட்டுக் கொன்றார். விசாரணையில், விபத்து தொடர்பான வழக்கை திரும்பப் பெற மறுத்ததால், வினோத்தை சுட்டுக் கொன்றதாக தேவ் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பானிபட் எஸ்.பி., அஜித் சிங் ஷெகாவத்தின் வாட்ஸாப் எண்ணிற்கு, சமீபத்தில் வினோத் கொலை தொடர்பாக சில தகவல்கள் வந்தன. அவற்றில், 'வினோத் மரணத்துக்கு தேவ் மட்டும் காரணமில்லை. அவருடன் நெருக்கமாக இருந்த மேலும் ஒருவரும் காரணம்' என குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த தகவல், வெளிநாட்டில் வசித்து வந்த வினோத்தின் சகோதரர் பிரமோத் அனுப்பியது என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட வினோத்தின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த கொலையில், வினோத்தின் மனைவி நிதிக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் கூறியதாவது:வினோத்தின் மனைவி நிதி, பானிபட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்தார். அங்கு பயிற்சியாளராக இருந்த சுமித் என்பவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து வினோத் மற்றும் நிதியிடையே நாள்தோறும் சண்டை நடந்து வந்துள்ளது. இதையடுத்து, சுமித்தின் நண்பரான பஞ்சாபைச் சேர்ந்த லாரி டிரைவர் தேவ் வாயிலாக விபத்து ஏற்படுத்தி, வினோத்தை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர் தப்பியதை அடுத்து, இரண்டாவது திட்டமாக வீட்டில் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியது. வினோத் இறந்த பின் வந்த காப்பீட்டு பணத்தை தேவ் வழக்கிற்காகவும், அவரது குடும்ப உறுப்பினர்களின் செலவுக்காகவும் அவரின் மனைவி நிதி வழங்கியுள்ளார்.மணிலாவில் தங்கியிருந்த நிதி மற்றும் அவரது காதலர் சுமித் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.