உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / -பா.ஜ.,வுக்கு காங்., ரகசிய ஆதரவு ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு

-பா.ஜ.,வுக்கு காங்., ரகசிய ஆதரவு ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு

புதுடில்லி:“அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை, சட்டசபைத் தேர்தலில் தோற்கடிக்க பா.ஜ.,வுக்கு ரகசியமாக காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது,” என, டில்லி முதல்வர் ஆதிஷி சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோர் கூறினார்.டில்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரியில் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும், கட்சிகள் தீவிர பிரசாரத்தை துவக்கி விட்டன.ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குறுதிகளையும் வெளியிட்டு வருகிறது.அதேபோல, ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ.,வும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், டில்லி முதல்வர் ஆதிஷி சிங், ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:டில்லியில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள், தேச வளர்ச்சியை உள்ளடக்கிய இண்டி கூட்டணி ஒற்றுமையை சேதப்படுத்துவது போல அமைந்துள்ளன.சமீபத்தில் நடந்த ஹரியானா சட்டசபைத் தேர்தலில், காங்கிரசுக்கு எதிராக நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஆம் ஆத்மிக்கு எதிராக பா.ஜ.,வின் குற்றச்சாட்டுகளை ஒப்பித்து வருகிறது.டில்லி சட்டசபைத் தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் பா.ஜ., அலுவலகத்தில் இறுதி செய்யப்பட்டது போல் தெரிகிறது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான அஜய் மக்கான் மற்றும் சந்தீப் தீட்சித் ஆகியோர் பா.ஜ.,வின் தவறுகளைப் பற்றி பேசுவதில்லை. ஆனால், ஆம் ஆத்மி கட்சியை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.எங்கள் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை தேச விரோதி எனக்கூறியுள்ள அஜய் மக்கான் எல்லா வரம்புகளையும் தாண்டி விட்டார். அதே நேரத்தில் காங்கிரஸ் எந்த ஒரு பா.ஜ., தலைவர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறுவதில்லை.ஆம் ஆத்மி கட்சியை, காங்கிரஸ் குறைத்து மதிப்பிடுகிறது. சந்தீப் தீட்சித் மற்றும் பர்ஹாத் சூரி ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்கள் பா.ஜ., ஆதரவைப் பெற்றுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.தேர்தலுக்காக வைத்துள்ள இந்தக் கூட்டு, இண்டி கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் அர்ப்பணிப்பையும் தோலுரித்துக் காட்டுகிறது.டில்லி மக்களால் தொடர்ந்து இரண்டு முறை முதல்வரக தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து அவதூறாகப் பேசிய மக்கான் உள்ளிட்டோர் மீது காங்கிரஸ் தலைமை 24 மணி நேரத்துக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், இண்டி கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற அழுத்தம் கொடுப்போம். கூட்டணியில் இருந்து காங்கிரசை நீக்க மற்ற கட்சிகளிடம் வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி