உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்சிகளின் பிரசார அஸ்திரமான அஞ்சனாத்ரி மலை

கட்சிகளின் பிரசார அஸ்திரமான அஞ்சனாத்ரி மலை

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் ஓட்டு வேட்டைக்கு பிரசித்தி பெற்ற அஞ்சனாத்ரி மலையை அஸ்திரமாக பயன்படுத்துகின்றனர்.லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. அந்தந்த கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், ஓட்டு வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். வாக்காளர்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர். வரலாற்று பிரசித்தி பெற்ற அஞ்சனாத்ரி மலை மீது, வேட்பாளர்களின் கண்கள் பதிந்துள்ளன. பிரசார அஸ்திரமாக பயன்படுத்துகின்றனர்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பின்பும், அதற்கு முன்பும் அஞ்சனாத்ரி மலைக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து முக்கிய புள்ளிகள், அரசியல்வாதிகள் வருகை தந்தனர்.கொப்பால், கங்காவதியில் உள்ள அஞ்சனாத்ரி மலை சர்வதேச அளவிலும் பெயர் பெற்றது. உலக புகழ்பெற்ற ஹம்பி, ஆனேகுந்திக்கு வருகை தரும் சுற்றுலா பயணியர், அஞ்சனாத்ரிக்கும் வருகின்றனர். இங்குள்ள இயற்கை காட்சிகளை ரசிக்கின்றனர். ராமாயண காலத்து சம்பவங்களை நினைவு கூர்கின்றனர்.அஞ்சனாத்ரி மலை ஆஞ்சனேயர் பிறந்த புண்ணிய தலமாக நம்பப்படுகிறது. முந்தைய பா.ஜ., அரசின் முதல்வர் பசவராஜ் பொம்மை, தன் பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் அறிவித்திருந்தார். சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, அஞ்சனாத்ரி மலையின் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருந்தார். தற்போது 20 முதல் 22 கோடி ரூபாய் செலவில், பணிகள் நடந்து வருகின்றன.லோக்சபா தேர்தல் நடப்பதால், பா.ஜ., காங்கிரஸ் அஞ்சனாத்ரி மலையை பிரசாரத்துக்கு பயன்படுத்துகின்றனர். 'எங்களுடைய அரசில் அஞ்சனாத்ரி மலை வளர்ச்சி அடைகிறது. இதற்கு நாங்களே காரணம். அயோத்தி போன்று இந்த மலையை மேம்படுத்தி, தரமான போக்குவரத்து வசதி செய்யப்படும்' என, பா.ஜ., உறுதி அளிக்கிறது. முன்னாள் எம்.பி., கரடி சங்கண்ணாவும், அஞ்சனாத்ரி மலைக்கு 'ரோப் வே' அமைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.மற்றொரு பக்கம் காங்கிரசும் கூட, அஞ்சனாத்ரி மலையின் வளர்ச்சிப் பணிகள் குறித்து உறுதியளித்து, ஓட்டு கேட்கிறது. 'மலையின் வளர்ச்சிக்கு பா.ஜ., 100 கோடி ரூபாய் அறிவித்துள்ளது என்றாலும், இது மிகவும் குறைவு. இம்முறை பட்ஜெட்டில் மேலும் 100 கோடி ரூபாய் ஒதுக்குவோம்' என, காங்கிரசார் கூறுகின்றனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு, கங்காவதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய, கன்னடம், கலாசார அமைச்சர் சிவராஜ் தங்கடகி, 'அஞ்சனாத்ரி மலையை பா.ஜ.,வினர், குத்தகைக்கு பெறவில்லை. நானும் ஹனுமன் பக்தன்தான். ஆண்டுதோறும் ஹனுமன் மாலை அணிகிறேன். நாங்களும் ராமர், ஹனுமர் பக்தர்கள்' என, கூறினார்.சட்டசபை தேர்தலில், கங்காவதியில் கல்யாண கர்நாடக பிரகதி கட்சி சார்பில் போட்டியிட்ட ஜனார்த்தன ரெட்டி, அஞ்சனாத்ரி மலையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, வாக்குறுதி அளித்தார். தற்போது பா.ஜ.,வில் இணைந்த இவர், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறுகிறார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை