உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெலகாவி தொழிலதிபர் கடத்தல் பெண் உட்பட மேலும் 3 பேர் கைது

பெலகாவி தொழிலதிபர் கடத்தல் பெண் உட்பட மேலும் 3 பேர் கைது

பெலகாவி: பெலகாவியில் தொழிலதிபரை கடத்தி, ஐந்து கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கில் காங்கிரஸ் பெண் பிரமுகர் உட்பட மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பசவராஜா நீலப்பா, 48, பிப்., 15ல் மஹாராஷ்டிராவில் இருந்து தன் வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அவரை வழிமறித்த நான்கு பேர், காரிலேயே அவரை கடத்திச் சென்றனர்.அவரது மொபைல் போன் மூலம், அவர் மனைவியிடம் பேசி, 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தனர். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, போலீசில் புகார் அளித்தார்.வழக்குப் பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட நபர், மஹாராஷ்டிரா - பெலகாவி எல்லையில் இருப்பதை கண்டுபிடித்தனர். போலீஸ் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள், தொழிலதிபரை விட்டு, விட்டுச் சென்றுவிட்டனர். விசாரணை நடத்திய கட்டபிரபா போலீசார், நான்கு பேரை கைது செய்து விசாரித்து வந்தனர்.இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி., பீமசங்கர் குலேத் நேற்று அளித்த பேட்டி:தொழிலதிபர் கடத்தல் வழக்கில் கைதான நான்கு பேர் அளித்த தகவலின் அடிப்படையில், காங்கிரஸ் பிரமுகர் என கூறிக் கொள்ளும் கலபுரகி மாவட்டம், கோகாக்கின் மஞ்சுளா ரமணகட்டி, எல்லேஷ் வலிகாரா, பரசுராம் காம்ப்ளே ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.இவ்வழக்கில் அரசியல் ரீதியாக யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை. அவ்வாறு கொடுத்திருந்தால், ஏழு பேர் கைதாகி இருக்கமாட்டார்கள்.தாலுகா அலுவலகத்தில், 'குரூப் டி' அரசு பணி வாங்கித் தருவதாக, இருவரிடம் இருந்து தலா 2.5 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக, மஞ்சுளா மீது ஏற்கனவே, குல்கோடா போலீசில் வழக்கு உள்ளது.இருவருக்கிடையே பண பரிவர்த்தனை இல்லை என்று தொழிலதிபரும், உள்ளது என்று மஞ்சுளாவும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்.ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக, கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ஆறு மொபைல் போன்கள், நான்கு கார்கள் மீட்கப்பட்டுள்ளன. மஞ்சுளாவால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை