பெங்களூரு: குப்பை பிரச்னையால், சர்வதேச அளவில் அவப்பெயரை பெற்றுள்ள பெங்களூரு மாநகராட்சி, துாய்மை ஆய்வில் பெங்களூரை முன்னிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது.பெங்களூரு நகர், குப்பை பிரச்னையால் தள்ளாடுகிறது. பல ஆண்டுகளாக வாட்டி வதைக்கும் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. கர்நாடக அரசுகள், பெங்களூரின் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண்பதாக, வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால் அதை நிறைவேற்றவில்லை. அதிக மதிப்பெண்
மாநகராட்சியும், குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பது, மின்சாரம் உற்பத்தி செய்வது, சாலைகளில் குப்பை கொட்டுவோரிடம் அபராதம் விதிப்பது என, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், பலன் பூஜ்யம். இதே காரணத்தால் துாய்மை ஆய்வில், அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை.மத்தியில் 2014ல், நரேந்திர மோடி பிரதமரான போது, 'துாய்மை இந்தியா' திட்டத்தை செயல்படுத்தினார். துாய்மையான நகரங்களை அடையாளம் பார்த்து, விருது வழங்கி கவரவிக்கிறார். கர்நாடகாவின், மைசூரு நகர் மூன்று முறை தொடர்ந்து, மத்திய அரசு வழங்கும் துாய்மை விருதை தட்டி சென்றது. ஆனால் பெங்களூரு மாநகராட்சியால், ஒரு முறையும் விருது பெற முடியவில்லை.இம்முறை விருதை பெற வேண்டும் என, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பெங்களூரின் நடைபாதைகள், சாலை ஓரங்களை துாய்மைப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக இயந்திரம் பயன்படுத்த தயாராகிறது. தற்போது உள்ள இயந்திரங்கள் மூலமாக, பிரதான சாலைகள் மட்டுமே சுத்தப்படுத்தப்படுகிறது. மற்ற சாலைகளை துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்கின்றனர். துாசி அதிகரிப்பு
இவர்கள் நடைபாதைகள், சாலை ஓரங்களை சரியாக சுத்தம் செய்வதில்லை. இதனால் துாசி அதிகரிக்கிறது. இதை சுத்தம் செய்ய மாநகராட்சி இயந்திரங்கள் வாங்க திட்டமிட்டுள்ளது. இயந்திரங்கள் சப்ளை செய்ய டெண்டர் அழைத்துள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நடைபாதைகள், குறுகலான லைன்கள், சாலை ஓரங்களை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்ய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இத்தகைய இயந்திரங்களை சப்ளை செய்யும்படி டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. தகுதியான நிறுவனங்கள், ஏஜென்சிகள் இயந்திரத்தை சப்ளை செய்யலாம்.டெண்டர் பெறும் நிறுவனங்கள், குறுகலான சாலை ஓரங்களை சுத்தம் செய்யும் வடிவம் கொண்ட இயந்திரங்களை, சப்ளை செய்ய வேண்டும். இதை இயக்க தேவையான தொழிலாளர்களையும் நியமிக்க வேண்டும். இயந்திரங்களை நிறுவனங்களே நிர்வகிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஊதியம், இயந்திரங்களை நிர்வகிப்பதற்கான செலவை, மாநகராட்சி ஏற்கும். சுவாசப் பிரச்னை
மெட்ரோ பணிகள், ஒயிட் டாப்பிங், மேம்பாலங்கள் கட்டுவது, சாலை, நடைபாதை சீரமைப்பு என, பல்வேறு பணிகள் நடப்பதால், நகரில் துாசி அதிகரிக்கிறது. சாலை ஓரங்கள், நடைபாதைகளில் துாசி குவிந்துள்ளது. வாகன பயணியர் பாதிப்படைகின்றனர். காற்றில் மிதக்கும் துாசி, சுவாச பிரச்னையை ஏற்படுத்தும். இதுவே, ஆஸ்துமாவுக்கு காரணமாகும்.நகரை துாய்மையாக பராமரித்து, மத்திய அரசிடம் விருது பெற மாநகராட்சி முயற்சிக்கிறது. இதற்கு இந்த இயந்திரங்கள் உதவும். இயந்திரங்கள் குப்பையை சுத்தம் செய்யும் சாலைகளின், முழுமையான விபரங்களை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம்.எந்த இயந்திரம், எந்த சாலைகளை சுத்தம் செய்கிறது என்ற அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படியே சாலைகள் சுத்தம் செய்யபடுகின்றனவா என்பதை, மக்கள் ஆய்வு செய்யலாம். ஒருவேளை அட்டவணைப்படி நடக்காவிட்டால், ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.