மூன்று சகோதரிகளை காரில் கடத்த முயன்ற பெங்களூரு தம்பதி கைது
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., குப்புரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரத்தினகிரி, இவரது மனைவி கார்த்திகைசெல்வி, 45. தம்பதிக்கு பிரியங்கா, 27, பிரியதர்ஷினி, 25, பிரித்திகா, 23, என மூன்று மகள்கள் உள்ளனர்.இதில் மூத்த மகள் பிரியங்கா, கொல்லிமலை வனச்சரகத்தில் 2019ல், இருந்து வனவராக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.அதன்பின், 'நெசராலிட்டி வெப்சைட்' வாயிலாக ஏழாவது கிராஸ் அரண்மணை நகர், பெங்களூரு வடக்கு தெருவை சேர்ந்த கார்த்திக், 41, என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டது.கடந்த 11ம் தேதி கார்த்திக், அவரது மனைவி கிரிஷ்மா, 39, ஆகியோர் காரில் குப்புரெட்டிபட்டி வந்து, மூன்று மகள்களையும் வேலைக்கு அழைத்துச் செல்வதாக அவர்களது பெற்றோரிடம் கூறினர்.தாங்கள் பெங்களூரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து, தொண்டு நிறுவனம் நடத்தி சமூக பணி செய்வதாக கூறினர். சந்தேகமடைந்த ரத்தினகிரி, பள்ளியை தொடர்பு கொண்டு விசாரித்தார்.அங்கு, கார்த்திக் என்பவர், தங்கள் பள்ளியில் வேலை செய்யவில்லை என கூறவே, குளித்தலை போலீசாருக்கு கார்த்திகைசெல்வி புகார் தெரிவித்தார்.நேற்று முன்தினம், கார்த்திக், கிரிஷ்மா ஆகியோர் காரில் புறப்பட தயாராக இருந்தபோது, குளித்தலை போலீசார் மூன்று பெண்களையும் மீட்டு, தம்பதியை கைது செய்தனர்.குளித்தலை நீதிமன்றத்தில் தம்பதியை ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.பிரியங்கா, பெற்றோருடன் செல்ல மறுத்ததால், அங்குள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். மற்ற இரு மகள்கள், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரில் உள்ள தங்கள் மாமா வீட்டிற்குச் சென்றனர். - நமது நிருபர் -