| ADDED : மே 06, 2024 05:14 AM
பெங்களூரு : நம்மை போல் பறவைகளுக்கும் தாகம் எடுக்குமே என்று நினைத்து, வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில், நம் வீட்டு பகுதிகளில் சிறிய தொட்டிகளில் தண்ணீர் ஊற்றி வைத்தால், அதை குடித்து, ஆனந்தமாய் சிறகடித்து பறக்கும்.நாடு முழுதும் நடப்பாண்டு கோடை வெயில், மக்களை வாட்டி வதைக்கிறது. கர்நாடகாவில் தினமும், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகிறது.வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை வெளியில் நடமாடுவதை தவர்ப்பது நல்லது என்று சுகாதார துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.வறட்சியால், குடிப்பதற்கும் தண்ணீரின்றி மக்கள் தவிக்கின்றனர். போர்வெல்களில் தண்ணீர் வற்றி விட்டதால், பல குடும்பங்கள் பல கி.மீ., துாரம் சென்று பிடித்து வருகின்றனர். இரண்டு மடங்கு விலை கொடுத்து, டேங்கர்களில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.ஆனால், நம்மை போல் பறவைகளுக்கும் தாகம் எடுக்குமே என்று நினைப்பதை மறந்து விடுகிறோம். நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாததால், பறவைகளும் கடுமையாக பாதித்துள்ளன.நம்மால் முடிந்த சிறிய உதவியாக, அவரவர் வீடுகளின் முன்பும், மொட்டை மாடியிலும் சிறிய தொட்டிகளில் தண்ணீர் ஊற்றி வைத்தால், பறவைகள் குடித்து, தாகத்தை தீர்த்து கொள்ளும். நாம் குடிக்கும் தண்ணீரையே வைத்தால் நல்லது.தொட்டிகள் வைக்க முடியாதவர்கள், சிறிய, சிறிய பாத்திரங்களில் தண்ணீர் வைத்தால் போதுமானது. தாகத்தை தீர்த்து கொள்ளும் பறவைகள், சிறகடித்து பறப்பதை பார்ப்பது நமக்குஆனந்தம் தரும்.