உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., அதிருப்தி அணியினர் ஆலோசனை எடியூரப்பாவை போட்டு கொடுக்க திட்டம்

பா.ஜ., அதிருப்தி அணியினர் ஆலோசனை எடியூரப்பாவை போட்டு கொடுக்க திட்டம்

பெலகாவி: பெலகாவியில் பா.ஜ., அதிருப்தி அணி தலைவர்கள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா மீது, மேலிடத்திடம் புகார் செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு, மே மாதம் தேர்தல் நடந்தது. ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜ., வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சியை காங்கிரசிடம் பறி கொடுத்தது. சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் தலைவர்களுடன், முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள் ஒப்பந்தம் செய்து கொண்டதாக, பா.ஜ., மூத்த தலைவரும், விஜயபுரா எம்.எல்.ஏ.,வுமான பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறினார்.சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அல்லது மாநில பா.ஜ., தலைவர் பதவியை, எத்னால் எதிர்பார்த்தார். ஆனால் எடியூரப்பாவின் ஆதரவாளரான அசோக்கிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியும்; எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு, மாநில தலைவர் பதவியும் கிடைத்தது. இதனால் மேலும் கடுப்பான எத்னால், எடியூரப்பாவை, விஜயேந்திராவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.மாநில தலைவராக உள்ள, விஜயேந்திராவின் நடவடிக்கை பிடிக்காத பா.ஜ., தலைவர்கள் சிலர், எத்னாலுடன் கூட்டு சேர ஆரம்பித்து உள்ளனர்.

ரகசிய கூட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோகாக் எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி, மைசூரு முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, முன்னாள் எம்.எல்.ஏ., குமார் பங்காரப்பா, எடியூரப்பாவின் தங்கை பேரன் சந்தோஷ் ஆகியோர், விஜயபுராவில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தினர்.'மூடா' முறைகேட்டை கண்டித்து, விஜயேந்திரா தலைமையில் நடந்த பாதயாத்திரையை, எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி, குமார் பங்காரப்பா புறக்கணித்தனர். கடைசி இரு நாள் பாதயாத்திரையில், பிரதாப் சிம்ஹா கலந்து கொண்டார்.இந்நிலையில் பெலகாவி உள்ள சொகுசு விடுதியில், பா.ஜ., அதிருப்தி டீம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. எத்னால் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முன்னாள் எம்.பி.,க்கள் தாவணகெரே சித்தேஸ்வர், மைசூரு பிரதாப் சிம்ஹா, சிக்கோடி அன்னாசாகேப் ஜொல்லே, முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி, முன்னாள் எம்.எல்.ஏ., குமார் பங்காரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பணம் கொள்ளை

கட்சி விரோத செயல்களில் எடியூரப்பாவும், விஜயேந்திராவும் ஈடுபடுகின்றனர். அவர்களை பற்றி மேலிடத்திடம் புகார் செய்ய வேண்டும் என்று, கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.கூட்டம் முடிந்த பின், அரவிந்த் லிம்பாவளி, ரமேஷ் ஜார்கிஹோளி கூறுகையில், 'நாங்கள் நடத்தியது அதிருப்தியாளர்கள் கூட்டம் இல்லை. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டை கண்டித்து, விஜயபுரா கூடலசங்கமாவில் இருந்து பல்லாரி வரை, பாதயாத்திரை நடத்துவது பற்றி முடிவு செய்து உள்ளோம். விஜயேந்திரா தலைமையில் நடந்த பாதயாத்திரை, மூடா முறைகேடு தொடர்பானது.'நாங்கள் நடத்தும் பாதயாத்திரை, மாநிலம் தொடர்பானது. எஸ்.சி., - எஸ்.டி., சமூக மக்களின் பணத்தை, அரசில் அங்கம் வகிக்கும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் கொள்ளை அடித்து உள்ளனர். எங்கள் பாதயாத்திரை குறித்து, கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவோம். தேவைப்பட்டால் மேலிட தலைவர்களை அழைப்போம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
ஆக 12, 2024 08:53

நீங்கள் அடித்துக்கொள்ளுங்கள். பிறகு சமயோதிதம்போல் ஓன்று சேர்வீர்கள். இது எல்லா அரசியல் கட்சிகளில் நடப்பவைதான். காலம் மாறும் காட்சிகள் மாறும். மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர். வரும் தேர்தல்களில் புதிய முகங்கள் தேர்ந்து எடுக்கப்படுவர். கட்சிகளில் பழைய பெருச்சாளிகள் விரட்டப்படுவர்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை