சித்ரதுர்கா: வால்மீகி மேம்பாட்டு வாரியத்தில் முறைகேடு விஷயத்தில், அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், வாரிய தலைவர் பசனகவுடா தத்தல், நிதித்துறை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.வால்மீகி மேம்பாட்டு வாரியத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்த குற்றச்சாட்டால், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்தார்.இந்த முறைகேட்டில், முதல்வர் சித்தராமையா, மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். போராட்டம்
எனவே, அவர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி, மாநிலத்தின் 31 மாவட்டங்களில், கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை, பா.ஜ.,வினர் நேற்று நடத்தினர். சித்ரதுர்காவில், அக்கட்சி மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில், நகரின் ஒனக்கே ஓபவ்வா சதுக்கத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். அங்கிருந்து பேரணியாக சென்று, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால், வழியிலேயே போலீசார் தடுப்புகள் அமைத்து, அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாருடன் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை மீறிச் செல்ல முயன்றதால், பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். பின், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். மக்கள் நலன்
அப்போது, விஜயேந்திரா கூறியதாவது:வால்மீகி சமுதாயத்தின் ஏழை மக்களின் நலனுக்காக, எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, 'வால்மீகி மேம்பாட்டு வாரியம்' அமைக்கப்பட்டது.ஆனால், அந்த வாரியத்திலேயே 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது வெட்கக்கேடு. முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முன்னாள் அமைச்சர் நாகேந்திராவிடம், சிறப்பு புலனாய்வு குழு, விசாரணை நடத்தவில்லை.இந்த முறைகேடு மூலம், லோக்சபா தேர்தலுக்கு, கர்நாடகாவை ஏ.டி.எம்., இயந்திரம் போன்று பயன்படுத்தியது உறுதியாகிறது என்று நாளிதழ்களில் செய்தி வந்துஉள்ளது.அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், வாரிய தலைவர் பசனகவுடா தத்தல், நிதித்துறை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.