தங்கவயலில் குப்பை கொட்ட எதிர்ப்பு பா.ஜ., - ம.ஜ.த.,வினர் போராட்டம்
தங்கவயல்: பெங்களூரு குப்பைகளை தங்கவயலில் கொட்டும் திட்டத்தை எதிர்த்து, பா.ஜ., - ம.ஜ.த., கட்சியினர் இணைந்து, தாசில்தார் அலுவலகம் முன் தர்ணா நடத்தினர்.ராபர்ட் சன் பேட்டை பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில் அருகில், நேற்று காலை 11:30 மணிக்கு தங்கவயல் தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி தலைமையில் பா.ஜ.,வினர் ஊர்வலம் துவக்கினர்.ஊர்வலத்தில், கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் ஊழல், துறைதோறும் முறைகேடு நடப்பதையும், பெங்களூரு குப்பைகளை தங்கவயலில் கொண்டு வந்து கொட்ட உள்ள திட்டத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.ம.ஜ.த.,வின் மாநில தொழிற்சங்க துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் மினி விதான் சவுதா அருகில் காத்திருந்து, அவர்களும் பா.ஜ.,வின் தர்ணாவில் பங்கேற்றனர்.தர்ணாவில் சம்பங்கி பேசியதாவது:வால்மீகி மேம்பாட்டு நிதியில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. 187 கோடி அல்ல 87 கோடி ரூபாய் மட்டுமே முறைகேடு நடந்துள்ளதாக முதல்வர் சித்தராமையாவே ஒப்புக்கொண்டுள்ளார். 'மூடா' விவகாரம், நீதிமன்ற விசாரணையில் உள்ளது. விரைவில் இதுபற்றி மாநிலமே அறிய போகிறது.பெங்களூரு குப்பைகளை தங்கவயலில் கொண்டு வந்து கொட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தங்கவயலில் உள்ள பல அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. ஆனால், தங்கவயல் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா இதுவரை அதை எதிர்த்து குரல் கொடுக்கவே இல்லை.அவரை ஓட்டு போட்டு எம்.எல்.ஏ., ஆக்கி இருக்கும், தங்கவயல் தொகுதியில் பெங்களூரு குப்பைகளை கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை தடுக்க, அவர் முதல்வர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். தங்கவயல் தொகுதி மீது அவருக்கு விஸ்வாசம் இருக்க வேண்டும்.பா.ஜ., - ம.ஜ.த.,வினர் தங்களின் சுயநலத்துக்காக இங்கு போராட்டம் நடத்தவில்லை. தங்கவயல் நலனுக்காக தான் போராட்டம் நடத்துகிறோம். எக்காரணம் கொண்டும் தங்கவயலில் குப்பைகள் கொட்ட விடமாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்.ம.ஜ.த., ராஜேந்திரன் பேசுகையில், ''பெங்களூரு குப்பைகளை கொட்ட தங்கவயல் தான் கிடைத்ததா. இங்குள்ளவர்கள் சுகாதாரமாக வாழ கூடாதா. இங்குள்ளவர்கள் மனிதர்களாக தெரிய வில்லையா. தங்கவயலில் தொழிற்சாலைகளை வரவேற்போமே தவிர குப்பைகளை அல்ல,'' என்றார். பின், தாசில்தார் நாகவேணியிடம் மனு அளித்தனர்.