பிரிட்டன் பெண் பலாத்காரம் டில்லி ஹோட்டலில் அட்டூழியம்
புதுடில்லி டில்லியில் உள்ள ஹோட்டலில் பிரிட்டன் பெண், அவரது சமூக வலைதள நண்பரால் பலாத்காரம் செய்யப்பட்டார். கர்நாடகாவின் புராதன சுற்றுலா தலமான ஹம்பியில், மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த பெண், தங்கும் விடுதியை நடத்தும் பெண் ஆகிய இருவர் கடந்த வாரம் மூவரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். அந்த பெண்களுடன் வந்த ஆண் சுற்றுலா பயணியர் மூவரை, அருகில் உள்ள கால்வாயில் குற்றவாளிகள் தள்ளி விட்டதில், ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். தாக்குதல் இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், நம் நாட்டுக்கு சுற்றுலா வந்த ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, 36 வயதான பெண், டில்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, டில்லி போலீசார் கூறியதாவது:பிரிட்டனைச் சேர்ந்த அந்த பெண், டில்லியைச் சேர்ந்த கைலாஷ், 25, என்பவருடன் ஏற்கனவே சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் நண்பராக இருந்தார். விடுமுறைக்காக இந்தியாவுக்கு வருவதாக கடந்த மாதம் கூறியுள்ளார்.அதன்படி, கடந்த 3-ல் நம் நாட்டுக்கு வந்த அந்த பெண், மஹாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, கடந்த 11-ல் கைலாஷை தொடர்பு கொண்டு, மும்பை வரும்படி அழைத்தார். ஆனால், தன்னால் மும்பை வர முடியாது என்றும், அந்த பெண்ணை டில்லி வரும்படியும் கைலாஷ் கூறினார். அதன்படி, டில்லி சென்ற அந்த பெண், மஹிபால்புர் பகுதியில் ஒரு ஹோட்டலில் தங்கினார்.தான் டில்லி வந்த தகவலையும் கைலாஷிடம் கூறினார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அந்த ஹோட்டலுக்கு சென்ற கைலாஷ், அந்த பெண்ணை சந்தித்தார். அப்போது, அவர் தவறாக நடக்க முயற்சிப்பதை உணர்ந்த அந்த பெண், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே, அந்த பெண்ணை அடித்து உதைத்து, பலாத்காரம் செய்துவிட்டு கைலாஷ் தப்பியோடி விட்டார்.இருவர் கைதுஅதிர்ச்சியடைந்த அந்த பெண், ஹோட்டல் வரவேற்பறைக்கு வந்தபோது, அங்கு பணியாற்றும் வாசிம் என்பவரும் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக, போலீஸ் நிலையத்தில் நேற்று காலை அந்த பெண் புகார் அளித்தார். உடனே, நடவடிக்கையில் இறங்கிய தனிப்படையினர், சட்ட விதிகளின்படி, பிரிட்டன் துாதரகத்துக்கு முதலில் தகவல் அளித்தனர். பின்னர், கைலாஷ், வாசிம் இருவரையும் தேடிப்பிடித்து கைது செய்தனர். அந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கைதான கைலாஷ், பிளஸ் 2 வரை படித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றித் திரிபவர். ஆங்கிலம் சரியாக பேசத் தெரியாமல், கூகுள் மொழிபெயர்ப்பு வசதி உதவியுடன் தான், பிரிட்டன் பெண்ணுடன் பேசி இருக்கிறார். இவ்வாறு போலீசார் கூறினர்.