முதல்வரை வரவேற்க பட்டாசு ஆம் ஆத்மியினர் மீது வழக்கு
புதுடில்லி: ஜாமினில் வெளிவந்த டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை வரவேற்கும் விதமாக அவரது வீடு முன்பு பட்டாசு வெடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ஆம்ஆத்மி கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, கடந்த மார்ச் 21ல் அவரை கைது செய்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் அவருக்கு ஜாமின் அளிக்கப்பட்டது. இதையடுத்து அன்று மாலை திஹார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார். அவரை வரவேற்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சியினர் அவரது வீடு முன் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு விற்பனை மற்றும் பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடையை மீறி முதல்வர் வீடு முன் பட்டாசு வெடித்ததாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.