உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவுக்கு ரூ.3,455 கோடி வறட்சி நிவாரணம் ஒதுக்கீடு மத்திய அரசு அறிவிப்பு

கர்நாடகாவுக்கு ரூ.3,455 கோடி வறட்சி நிவாரணம் ஒதுக்கீடு மத்திய அரசு அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவுக்கு 3,454.22 கோடி ரூபாய் வறட்சி நிவாரண நிதி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கர்நாடகாவில், 2023ல் தென் மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும் சரியாக பெய்யவில்லை. இதனால், 223 தாலுகாக்களில் கடும் வறட்சி நிலவுவதாக மாநில அரசு அறிவித்தது. கடும் தண்ணீர் தட்டுப்பாடு எழுந்து, மக்கள் குடிப்பதற்கும் குடிநீர் இன்றி கஷ்டப்படுகின்றனர்.

அறிக்கை தாக்கல்

இதையடுத்து, கர்நாடகாவுக்கு மத்திய குழு வந்து, வறட்சி பகுதிகளில் ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. ஆனாலும், மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை.இதற்கிடையில், நிவாரண நிதி வழங்க தயாராக இருப்பதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் கமிஷனிடம் சிறப்பு அனுமதி வழங்கும்படி கேட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.ஆனால், கர்நாடகாவில் வறட்சியால் மக்கள் கடுமையாக பாதித்துள்ளதாகவும், உடனடியாக 18,172 கோடி ரூபாயை வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி, கர்நாடக அரசு, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தது.

நிவாரண நிதி

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏப்ரல் 29ம் தேதிக்குள் நிவாரண நிதி அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது.அதன்படி, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வறட்சி நிவாரண நிதியாக, 3,454.22 கோடி ரூபாயை, கர்நாடகாவுக்கு வழங்குவதாக மத்திய நேற்று அரசு அறிவித்துஉள்ளது.இதுகுறித்து, முதல்வர் சித்தராமையா, கலபுரகியில் நேற்று கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மத்திய அரசு 3,454 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த தொகை, மாநில அரசு கோரியதில், கால் பாகம் கூட இல்லை.கர்நாடகாவில், 35,000 கோடி ரூபாய் மதிப்புள்ள விளைச்சல், வறட்சியால் நஷ்டமானது. தேசிய பேரிடர் நிவாரண நிதியாக, 18,172 கோடி ரூபாய் கேட்டும், குறைவான நிதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.

காங்கிரஸ் இன்று போராட்டம்

துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரில் நேற்று கூறியதாவது:நாங்கள் 18 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும்படி கேட்டோம். அதில் 50 சதவீதம் கூட அறிவிக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள நிதி, யானை பசிக்கு, சோளப்பொறி போன்று உள்ளது.நாங்கள் என்ன மத்திய அரசிடம் பிச்சை கேட்டோமா? வறட்சி நிவாரணம் வழங்குவது மத்திய அரசின் கடமை. குறைவான நிதி அறிவித்துள்ளதால், இன்று மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்