திருவனந்தபுரம்,நடந்து முடிந்த 18வது லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. பிரதமராக மோடி கடந்த 9ல் பதவியேற்றார். இதையடுத்து, புதிய லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் நாளை மறுநாள் துவங்கி, ஜூலை 3 வரை நடக்க உள்ளது. கண்டனம்
கூட்டம் நடைபெறும் முன், சபையின் மூத்த உறுப்பினர் ஒருவர் இடைக்கால லோக்சபா சபாநாயகராக நியமிக்கப்படுவது வழக்கம். தற்போதைய சூழலில், லோக்சபாவில் எட்டு முறை எம்.பி.,யாக உள்ள கேரளாவைச் சேர்ந்த காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், ஏழு முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.,வைச் சேர்ந்த ஒடிஷாவின் பர்த்ருஹரி மஹ்தப் இடைக்கால சபாநாயகராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது குறித்து கேரளாவில் பேசிய கொடிக்குன்னில் சுரேஷ் கூறியதாவது:கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட மரபுகளுக்கு எதிராக, தற்போது இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.,வின் வீரேந்திர குமாரும், நானும் அதற்கு தகுதி பெற்றுள்ளோம். வீரேந்திர குமார் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், இடைக்கால சபாநாயகர் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். லோக்சபா செயலகத்தால் என் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதிக்கு அனுப்பிய பட்டியலில் என் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. வழக்கம் போல், பார்லி., நடைமுறைகளை புறக்கணிக்கும் பணியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஏழு முறை வெற்றி
இதற்கு பதிலடியாக, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:பார்லிமென்ட் விதிகளை பற்றி சரியாகத் தெரியாதவர்கள், படிக்காதவர்கள் தான், இடைக்கால சபாநாயகர் தேர்வு குறித்து விமர்சிக்கின்றனர். காங்.,- - எம்.பி., சுரேஷ், எட்டு முறை தேர்வு செய்யப்பட்டவர் என்பது உண்மை தான். ஆனால், 1998 மற்றும் 2004 தேர்தல்களில் அவர் வெற்றி பெறவில்லை. ஆனால், மஹ்தப் தொடர்ச்சியாக ஏழு முறை வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.