நல்ல நிலையில் உள்ள சாலைகளுக்கு தார் போடும் மாநகராட்சி அதிகாரிகள்
பெங்களூரு பள்ளங்கள் ஏற்பட்ட சாலைகளை, சரி செய்யாத பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், நல்ல நிலையில் உள்ள சாலைகளை தோண்டி, புதிதாக அமைக்கின்றனர். இப்படி பணத்தை வீணாக்குவது சரியா என, பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.பெங்களூரில் பெரும்பாலான சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியிலேயே பள்ளங்கள் தென்படுகின்றன. பாதசாரிகள், வாகன பயணியர் அவதிப்படுகின்றனர். சாலை பள்ளங்களை சரி செய்யும்படி, மக்கள் மன்றாடுகின்றனர். ஆனால் இத்தகைய சாலைகளை, மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.ஆனால் நல்ல நிலையில் உள்ள சாலைகளை, தோண்டி புதிதாக அமைக்கின்றனர். மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகின்றனர். 2017 - 18ம் ஆண்டில் மாநில அரசின் நகர வளர்ச்சி திட்டத்தின் நிதியுயவியில், பெங்களூரின் மத்திய பகுதியில் ரிச்மண்ட் சாலை, செயின்ட் மார்க்ஸ் சாலை, கே.ஜி.சாலை, விட்டல் மல்லையா சாலை உட்பட ஆறு சாலைகள் மேம்படுத்தப்பட்டன. இந்த சாலைகள் இப்போதும் நல்ல நிலையில் உள்ளன.ஆனால், மாநகராட்சியின் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் பிரிவு, இந்த சாலைகளை தோண்டி விட்டு, புதிதாக தார் போட டெண்டர் அழைத்துள்ளது. கே.ஜி.சாலையின் ஹட்சன் சதுக்கத்தில் இருந்து, மைசூரு வங்கி சதுக்கம் வரை, 'ஸ்டோன் மாட்ரிக்ஸ்' என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பணிகள் நடக்கவுள்ளன. பெங்களூரில் இது போன்ற தொழில்நுட்பம் பயன்படுத்துவது, இதுவே முதன் முறையாகும்.இந்த ஆறு சாலைகளும் நல்ல நிலையில் உள்ளதாக, திட்டப்பிரிவு அறிக்கை அளித்தும், அடிப்படை வசதிகள் பிரிவு, சாலைகளுக்கு தார் போடும் பணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து, நகர வளர்ச்சி துறை செயலர், மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், 'சாலைகள் நல்ல நிலையில் உள்ளன. பள்ளங்கள் இல்லை. நடைபாதை, மழைநீர் சேம்பரை சுத்தம் செய்வது, சேம்பர் கவர் பழுது பார்ப்பது, மார்க்கிங் உட்பட சில நிர்வகிப்பு பணிகள் மட்டும் செய்ய வேண்டும்.'ஆனால் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் பிரிவு அதிகாரிகள், மொத்த சாலைகளையும் புதிதாக அமைக்க முற்பட்டுள்ளனர்' என, விவரித்துள்ளார்.நல்ல நிலையில் உள்ள சாலைகளை, மீண்டும் புதிதாக அமைக்கும் திட்டத்தை நிறுத்தும்படி, அடிப்படை வசதிகள் பிரிவுக்கு உத்தரவிடும்படியும் கோரியுள்ளார்.