| ADDED : ஆக 19, 2024 10:52 PM
உத்தரகன்னடா: குடியிருப்பு பகுதியில் முதலை நடமாடியதால் கிராம மக்கள், கிலியில் உள்ளனர்.உத்தரகன்னடா, தான்டேலி நகரின், அம்பேவாடி கிராமத்தில் நாகதேவதை கோவில் அருகில், குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடக்கின்றன. பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தொடர் மழை பெய்ததால், பள்ளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.வெள்ளத்தில் எங்கிருந்தோ அடித்து வரப்பட்ட முதலை, இந்த பள்ளத்தின் நீரில் அடைக்கலம் புகுந்தது. நேற்று மதியம், நீரில் இருந்து முதலை வெளியில் வந்தது. அப்பகுதியில் வசிக்கும் ஒருவர், முதலையை பார்த்து, தன் மொபைல் போனில் பதிவு செய்தார். கிராமத்தினருக்கும் தகவல் கூறி எச்சரித்தார்.கிட்டத்தட்ட 4 அடிக்கும் அதிகமான நீளம் உள்ள முதலை, குடியிருப்பு பகுதியிலேயே காணப்பட்டதால், மக்கள் பயத்தில் உள்ளனர். இந்த குடியிருப்பு அருகிலேயே பள்ளி உள்ளது. இப்பகுதி வழியாக மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். தற்போது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர் அஞ்சுகின்றனர். இதை பிடிக்கும்படி வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.