தர்ஷன் படம் மறு வெளியீடு: ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
பெங்களூரு:நடிகர் தர்ஷன் நடித்த, கரியா திரைப்படம் நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய, ரசிகர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டினர்.கொலை வழக்கில் கைது ஆனாலும், நடிகர் தர்ஷன் மீது அவரது ரசிகர்களுக்கு, பாசம் குறையவில்லை. தர்ஷனை இன்னும் தங்களது 'பாஸ்' என்று கூறுகின்றனர். அவர் சிறையில் இருந்து வெளிவர வேண்டி, கோவில்களில் வழிபடுகின்றனர்.தர்ஷன் நடிப்பில் வெளியான கரியா திரைப்படம், பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில் நேற்று, ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. திரையரங்கு முன் ரசிகர்கள் குவிந்தனர்.தர்ஷன் கட் - அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தனர். தர்ஷனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோஷம் எழுப்பக் கூடாது என்று எச்சரித்தனர். எச்சரிக்கையை மீறி ரசிகர்கள் கோஷம் எழுப்பியதுடன், பட்டாசும் வெடித்தனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.கடந்த 2019ல் தர்ஷன் நடிப்பில், குருஷேத்ரா என்ற திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் துரியோதனன் வேடத்தில் தர்ஷன் நடித்தார். துரியோதனனாக நடித்த பின், தர்ஷனுக்கு தன்னை விட பெரியவர் யாரும் இல்லை என்ற மனப்பான்மை ஏற்பட்டது.அந்த படத்தில் நடித்ததற்கு பின்பு தான், அவருக்கு பிரச்னை அதிகமானதாக, மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த, நாட்டுப்புற கலைஞர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பல்லாரியில் உள்ள கனகதுர்கம்மா தேவி கோவிலில், தர்ஷன் சிறையில் இருந்து வெளிவர வேண்டி, அவரது ரசிகர்கள் நேற்று தேங்காய் உடைத்து வழிபட்டனர்.கனகதுர்கம்மா தேவி சிலைக்கு, கிரேன் மூலம் மாலை போடப்பட்டது. அப்போது தர்ஷன் ரசிகர் ஒருவர், சாமி சிலை மீது ஏறி, காலால் மிதித்து மாலை போட்டார். அம்மனை அவமதித்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் கோரி வருகின்றனர்.