உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தைகளை துன்புறுத்திய ‘டே கேர்’ பெண் ஊழியர் கைது

குழந்தைகளை துன்புறுத்திய ‘டே கேர்’ பெண் ஊழியர் கைது

பெங்களூரு: சேட்டை செய்த குழந்தைகளை பயமுறுத்த, வாஷிங் மெஷினில் அடைத்து துன்புறுத்திய, ‘டே கேர்’, பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் பெங்களூரு புரூக்பீல்டில் ஐ.டி., நிறுவனமான, ‘கேப் ஜெமினி’ என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. நிறுவனத்தில் பகல் நேரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குழந்தைகளை பராமரிக்கும் வகையில், நிறுவன வளாகத்திலேயே, ‘டே கேர்’ எனும் குழந்தைகள் பராமரிப்பு மையம் இயங்கியது. இந்நிலையில், சேட்டை செய்த குழந்தைகளை பயமுறுத்த, அங்குள்ள வாஷிங் மெஷினில் அடைப்பது; கழிப்பறை கோப்பை மீது அமர வைத்து தண்ணீரை பீய்ச்சி அடிப்பது; கழிப்பறைக்குள் அடைப்பது என கொடூரமான செயல்களை, அங்கு வேலை செய்த மஞ்சுளா, விஜயலட்சுமி, சிந்து, பவானி, பிந்து ஆகிய, ஐந்து பெண் ஊழியர்கள் செய்தனர்.  இதுதொடர்பான, வீடியோக்கள், ‘வாட்ஸாப்’ குழுக்களில் வெளியான நிலையில், குழந்தைகள் நல அதிகாரிகள் அளித்த புகாரில், ஐந்து பெண் ஊழியர்கள் மீதும் வழக்கு பதிவானது. விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பப்பட்டது. விஜயலட்சுமி, சிந்து, பவானி, பிந்து ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர். இதில், விஜயலட்சுமி என்பவர் தான் குழந்தைகளை அதிகமாக துன்புறுத்தியது என்று தெரிந்ததால், அவர் கைது செய்யப்பட்டார். மற்ற மூன்று பேரும் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள மஞ்சுளாவை போலீஸ் தேடுகிறது. டே கேரில் பணியாற்றிய சுஜாதா என்பவர் குழந்தைகளுக்கு எதிராக நடந்த கொடுமைகளை, நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன், சுஜாதா திடீரென வேலையில் இருந்து நின்றார். குழந்தைகளை துன்புறுத்திய வீடியோக்களை அவர் தான் வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !