ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்
ஜாமியா நகர்:சட்டவிரோத ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கட்டடங்களை உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் டில்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து அகற்றியது.தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஜாமியா நகரில் சட்டவிரோதக் கட்டடங்கள் ஆக்கிரமித்து இருந்தன. முராடி சாலை, பாட்லா ஹவுஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கும் டில்லி மாநகராட்சிக்கும் உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சம்பவ இடங்களில் போலீசாரும் அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கி நேற்று வரை நீடித்தது.